Saturday, January 24, 2009

தத்து எடுக்கும் முறை


தமிழகத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட 17க்கும் மேற்பட்ட குழந்தைகளை தத்து கொடுக்கும் தொண்டு நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் சில நிறுவனங்கள் உள்நாட்டிலும், சில வெளிநாடுகளிலும் குழந்தைகளை தத்து கொடுக்கின்றன.
தத்து எடுப்பதற்கு முதலில், தம்பதியர்களின் மனப்பூர்வ சம்மதம் அவசியம். இரண்டு பேர் சேர்ந்தேதான் தொண்டு நிறுவனத்தை அணுக வேண்டும். அவர்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கும் தத்தெடுப்பது குறித்து தெரிவித்திருக்க வேண்டும். அதிலும், கூட்டுக் குடும்பத்திலிருந்தால் வீட்டிலுள்ள அனைவருக்கும் தத்தெடுப்பதைப் பற்றி தெரியப்படுத்தியிருக்க வேண்டும்.
தத்தெடுக்க விரும்பும் தம்பதியிரிடம் திருமணமாகி எத்தனை ஆண்டுகளாகின்றன?? குழந்தைகள் உள்ளனரா, இல்லையெனில் என்ன காரணம்?? இனி குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதா?? தத்தெடுப்பதற்கு என்ன காரணம்?? தத்தெடுத்த பிறகு குழந்தை பெற்றுக் கொள்வீர்களா? என்பன போன்ற கேள்விகளைக் கேட்பார்கள். அதற்கு அவர்கள் தருகிற பதிலைக் கொண்டுதான் தத்து கொடுப்பது பற்றிய முதற்கட்ட முடிவை எடுப்பார்கள்.
தத்து கொடுப்பது என முடிவானதும், சம்பந்த்தப்பட்ட தம்பதியரின் பெயர்களை பதிவு செய்வார்கள். இதற்கான பதிவுக் கட்டணம் நூறு ரூபாயிலிருந்து இருநூற்றைம்பது ரூபாய் வரை இருக்கும். இதையடுத்து அவர்கள் தத்து வேண்டி ஒரு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கூடவே சில சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது தம்பதியின் திருமண அழைப்பிதழ், திருமணப் புகைப்படம், வயது சான்றிதழ், சொத்து வருமானம், மற்றும் கடன் விவரங்கள், குழந்தையை வளர்க்கும் அளவிற்கு பொருளாதார சூழல் இருப்பதற்கான சான்றிதழ், குடும்பத்தாரது ஒப்புதல் கடிதம், மற்றும் நெருங்கிய நண்பர்கள் இருவரது ஒப்புதல் கடிதங்கள் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் சேர்த்து வழங்க வேண்டும். இவை சரிபார்க்கப்பட்ட பிறகு, தத்து எடுக்க விரும்புபவருடைய வீட்டுக்கு சமூக சேவகர் ஒருவர் செல்வார்.
அந்த குடும்ப சூழல், அவர்கள் கொடுத்த சான்றிதழ் எல்லாம் சரிதானா என்பதையெல்லாம் அந்த சமூக சேவகர் கண்டறிந்து ஒரு ஒப்புதல் அறிக்கை தருவார். அதனடிப்படையில்தான் தத்து கொடுப்பது குறித்த இரண்டாம் கட்ட முடிவு எடுக்கப்படும்.
தம்பதியின் உருவம், நிறம் முதலியவற்றை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றபடி உள்ள குழந்தையைதான் தம்பதியிடம் காட்டுவார்கள் (மற்றபடி குழந்தை இருக்குமிடத்திற்கு தத்து எடுப்பவர்களை அனுமதிக்கமாட்டார்கள்).
பின்னர் இருபது ரூபாய் பத்திரத்தில் நோட்டரி பப்ளிக் மூலம் தம்பதியிடம் எழுதி வாங்கிக் கொண்டு தற்காலிகமாக குழந்தையை ஒப்படைப்பார்கள். மூன்று முதல் ஆறு மாதம் வரை பலமுறை தம்பதியையும், குழந்தையையும் சந்தித்து குழந்தைக்கும் அவர்களுக்குமிடையே அந்யோன்யம் ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவார்கள்.
இதில் அவர்களுக்கு முழு சம்மதம் ஏற்பட்ட பிறகுதான், தம்பதி அளித்த விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்களை கோர்ட்டில் ஒப்படைப்பார்கள். இதன் பிறகு குழந்தையை தத்து கொடுக்கும் நிறுவன அலுவலர் ஆகியோரிடம் கோர்ட் விசாரித்து, சட்ட ரீதியாக அனுமதியை வழங்கும். இவையனைத்துமே குழந்தையின் நலன் கருதி எடுக்கப்படும் நடவடிக்கைகளே!!
குழந்தையை தத்து எடுத்ததும், பத்திரப் பதிவாளர் அலுவலகத்தில் இது குறித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் அது அவர்களின் சொந்தக் குழந்தையாகிவிடும். பிறப்பு சான்றிதழைப் பெறுவதும் மிக அவசியம். பிறகு தத்தெடுத்தவர் மற்றும் அவர்களின் உறவினர்கள் தவிர வேறு எவரும் குழந்தையை சொந்தம் கொண்டாட முடியாது.
பெற்றோர்கள் குழந்தையை தத்து கொடுத்த நிறுவனத்திற்கு பராமரிப்புக் கட்டணமாக அதிகபட்சம் பதினைந்தாயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். இதற்கு மேல் வசூலிக்கக் கூடாது என்பது அரசு விதி. அதே போல் மருத்துவ செலவுத் தொகையாக ரூபாய் ஒன்பதாயிரம் செலுத்த வேண்டும். தவிர வக்கீல் கட்டணம், சான்றிதழ் கட்டணம் ஆகியவையும் உண்டு.
*** குழந்தையை தத்து எடுக்க விரும்புகிற கணவன் மனைவி இருவருடைய வயதின் கூட்டுத் தொகை 90க்குள் வந்தால் அவர்கள் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தையைத் தத்தெடுக்கலாம். வயதின் கூட்டுத்தொகை 91 என்றால் ஒரு வயது குழந்தையையும், 92 எனில் இரண்டு வயது குழந்தையையும் தத்து எடுக்கலாம். கூட்டுத் தொகை 100 ஐத் தாண்டினால் தத்து எடுக்க அனுமதி இல்லை.
*** குழந்தையின் வயது, ஐந்திற்கு மேல் எனில் அந்த குழந்தையுன் சம்மதம் மிக மிக முக்கியம்.
*** கணவன் இல்லாத நிலையில் கூட ஒரு பெண் தத்தெடுக்க முடியும். இப்படி தத்தெடுக்கும் போது குழந்தைக்கும் அவருக்கும் இடையே 21 வயது வித்யாசம் இருக்க வேண்டும்.
*** பெண் துணை இல்லாத ஆணுக்கு தத்து கொடுக்க முடியாது.