Monday, February 16, 2009

சித்தர்களும், அஷ்டமாசித்துக்களும்.......


இல்லற வாழ்க்கையையும் அதன் மீது கொண்ட ஆசையையும் துறந்தவர்களை நாம் துறவிகள் என்கிறோம். சமுதாயத்தைவிட்டு ஒதுங்கி, காடுகளுக்கும் மலைகளுக்கும் சென்று தவம் செய்பவர்களை முனிவர்கள் என்கிறோம். வேதங்கள் அறிந்து உலக வாழ்வியல் அறிவையும் பெற்றவர்களை ரிஷிகள் என்கிறோம். துறவி என்பது முதற்படி, முனிவர் என்பது இரண்டாம் படி, ரிஷி என்பது மூன்றாம் படி. இந்த மூன்று படிகளையும் கடந்து நின்று தேவர்களுக்கு இணையாக உலகத்தின் வாழ்பவர்கள் சித்தர்கள். சித்தர்கள் முக்காலமும் உணர்ந்தவர்கள். இவர்கள் ஒரு தெய்வ இனம். சித்தர்களுக்கு ஜாதி, மதம், மொழி, நாடு, இனம், ஏழை, பணக்காரன் போன்ற வேறுபாடுகள் கிடையாது.
நம் பாரத பூமியில் அநேக சித்தர்கள் வாழ்ந்தனர். வாழ்ந்தும் வருகின்றனர். இவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது கடினம். சித்தர் என்று சொன்னவுடன் தாடி வைத்து, சடை முடி தரித்து அழுக்கேறிப் போன கோவண உடையுடன் வானத்தை அண்ணாந்து வெறித்துப் பார்க்கும் ஓர் உருவம் நம் மனக்கண்முன் தோன்றுவது இயற்கை. ஆனால் சுத்தமான, வெள்ளையுடையுடன், கம்பீரமான தோற்றத்துடன் எல்லோரிடத்திலும் இயல்பாக பேசி சிரித்துப் பழகி அன்னதானம் இடைவிடாது செய்து, பல பாடல்களை இயற்றி, கவிஞராக வாழ்ந்து, ஜீவகாருண்ய ஒழுக்கத்தை போதித்த வடலூர் ராமலிங்க அடிகளும் ஒரு சித்தரே!!!

சித்தர்களை வெளித்தோற்றத்தை வைத்து அடையாளம் காண இயலாது. தோற்றத்தில் அவர்கள் அக்கறை காட்டுவதும் இல்லை. ஆனால், மன ஒருமைப்பாட்டுடன் இறைவனையே எப்போதும் நினைத்து தனக்குள் இறைவன் இருப்பதை உணர்ந்து இறைவனுடன் ஒன்றிய நிலையில் வாழ்பவர்கள். இறைவனின் அருளால் பல சித்திகளை அடைந்தவர்கள். சூழ்நிலைகளைப் பொறுத்து, தேவைப்பட்டால் மட்டுமே தன் சக்திகளையும், ஆற்றல்களையும் வெளிப்படுத்துவர்.

பொதுவாகவே நம்மூர்களில் காணப்படும் சாமியார்கள் என்பவர்கள் வேறு. கோவை மாவட்டத்தைச் சார்ந்த ஊரில் ஒரு சாமியார் இருந்தார். அவர் தன்னுடைய கையில் கடவுளைக் காட்டுவார். தான் கண்ட கோவில் கருவறைகளை ஒவ்வொன்றாக சொல்லி, எது வேண்டும் பார் என்பார். அவர் சொல்லாத கோவில்களைச் சொல்லி கேட்கக் கூடாது. கேட்டால் காட்டவும் முடியாது. இதுபோல போலி வித்தைக்காரர்கள் வேறு. சித்தர்கள் இத்தகைய மாயாஜால வித்தைகளை வெறுத்து ஒதுக்கியவர்கள். மக்களை தோஷம் என்று ஏமாற்றுவதும், பரிகாரம் என்று சொல்லிப் பணம் பறிப்பதும், முனிவர்கள் போல் வேஷமிட்டுத் திரிவதும் சித்தர்களின் செயல்கள் அல்ல.

இடைவிடாது பலகாலம் யோகமார்க்கத்தில் ஈடுபட்டு மனதை ஒருநிலைப்படுத்தி படிப்படியாக இலய யோகம் செய்து (இலயம் என்பது ஒன்றுபடுதல் ஆகும். இறைவனுடன் ஆன்மா ஒன்றுபடும் பயிற்சிகளில் ஈடுபடுவது இலயம் ஆகும்) அஷ்டமா சித்துக்களை இறைவன் அருளால் பெற்றவர்கள் சித்தர்கள். இந்த சித்துக்களை தேவையில்லாமல் ஆடம்பரத்திற்கு அவர்கள் செய்வதில்லை. நாம் செய்வதற்கு அரிய செயல்கள் என்று நினைப்பவற்றை சித்தர்கள் சர்வ சாதாரணமாக செய்வார்கள். அஷ்டமா சித்துக்களைக் கைவரப் பெற்றவர்களே சித்தர்கள்.

அஷ்டமாசித்துக்கள்::

* அணிமா:
பெரிய ஒரு பொருளை தோற்றத்தில் சிறியதாகக் காட்டுவது/ஆக்குவது.
ப்ரிங்கி முனிவர் முத்தேவர்களை மட்டும் வலம் வருவதற்காக சிறு வண்டாக உருமாறினார் என்ற செய்தி அணிமா என்ற சித்தைக் குறிக்கும்.
* மஹிமா:
சிறிய பொருளைப் பெரிய பொருளாக்குவது.
வாமன அவதாரத்தில் திருமால் இரண்டடியால் மூவுலகை அளந்ததும், க்ருஷ்ணன் அர்ஜூனனுக்கு உயர்ந்த வடிவம் காட்டி உலகமே தன்னுள் அடக்கம் என்று காட்டியதும் மஹிமா என்னும் சித்தாகும்.
* லஹிமா:
கனமான பொருளை இலேசான பொருளாக ஆக்குவது.
திருநாவுக்கரசரை சமயப் பகை காரணமாக கல்லில் கட்டி கடலில் போட்டபோது கல் மிதவையாகி கடலில் மிதந்தது லஹிமா ஆகும்.
*கரிமா:
இலேசான பொருளை மிகவும் கனமான பொருளாக ஆக்குவது.
அமர்நீதி நாயனாரிடம் கோவணம் பெறுவதற்காக இறைவன் வந்தபோது, ஒரு கோவணத்தின் எடைக்கு தன்னிடமுள்ள எல்லா பொருட்களை வைத்தும் தராசுத் தட்டு சரியாகாமல் கடைசியாக தானும் தன் மனைவியும் ஏறி அமர்ந்து சரி செய்த சித்தி கரிமா.
*பிராத்தி:
எவ்விடத்திலும் தடையின்றி சஞ்சாரம் செய்வது.
திருவிளையாடற்புராணத்தில் "எல்லாம்வல்ல சித்தரான படலம்" என்னும் பகுதியில் சிவன் ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும் காட்சியளித்ததாக வரும் சித்தி பிராத்தி.
*பிரகாமியம்:
வேண்டிய உடலை எடுத்து நினைத்தவரிடத்தில் அப்போதே தோன்றுதல்.
அவ்வையார் இளவயதிலேயே முதுமை வடிவத்தைப் பெற்றதும், காரைக்கால் அம்மையார் தன்னுடைய அழகான பெண்வடிவத்தை மாற்றி பேய் வடிவம் பெற்றதும் பிரகாமியம் என்னும் சித்தாகும்.
*ஈசத்துவம்:
ஐந்து தொழில்களை நடத்துதல்.
திருஞானசம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்து எழுப்பியமை ஈசத்துவம் எனும் சித்தாகும்.
*வசித்துவம்:
ஏழுவகைத் தோற்றமாகிய தேவ, மானிட, நரக, மிருக, பறப்பன, ஊர்வன, மரம் முதலியவற்றைத் தம்வசப் படுத்துதல்.
திருநாவுக்கரசர் தம்மைக் கொல்வதற்காக வந்த யானையை நிறுத்தியதும், ராமர் ஆலமரத்திலிருந்து ஒலி செய்து கொண்டிருந்த பறவைகளின் ஓசையை நிறுத்தியதும் வசித்துவம் எனும் சித்தாகும்.

Sunday, February 15, 2009

சகாப்தக் காதல்..........


சிகாகோவில் உள்ள ஸிட்லி ஆஸ்டின் என்னும் புகழ்பெற்ற சட்ட நிறுவனம் ஒன்றில், மிஷேல் ராபின்சன் எனும் இளம்பெண் பணிபுரிந்து வந்தார். அது 1989 ஆம் ஆண்டு ஜூன் மாதம். அந்த நிறுவனத்தின் உயர் பதவியை ஏற்க இளைஞர் ஒருவர் அங்கு வந்து சேர்ந்தார். மெலிந்த உருவம், வசீகரத் தோற்றம், உற்சாக மனது என்று இருந்த அந்த இளைஞரின் ஆலோசகராக மூன்று மாதம் பணிபுரிந்தார் மிஷேல். இருவருமே கருப்பரினத்தைச் சேர்ந்தவர்கள். அலுவலகம் மட்டுமின்றி நிறுவனம் ஏற்பாடு செய்த பொது நிகழ்ச்சிகள் பலவற்றிலும் அவருடனேயே இருக்க வேண்டிய சூழல் மிஷேலுக்கு. அப்போதுதான் நுட்பமான அறிவு கொண்ட மிஷேலுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது அவருக்கு. இந்த பெண் என்னுடைய வாழ்க்கைத் துணையாக அமைந்தால் என்ற ஆசையும் ஏற்பட்டது.

தன் மனம் கவர்ந்த மங்கையிடம் தன் காதலை வெளிப்படுத்தவும் செய்தார் அந்த இளைஞர். ஆனால் அடுத்த வினாடியே அந்த விருப்பத்தை நிராகரித்தார் மிஷேல்.

அன்று மிஷேல் என்கிற அந்த புத்திசாலிப் பெண்ணின் மனதை கவரும் வழிதெரியாமல் தவித்த அந்த நபர்தான் இன்று ஒட்டுமொத்த அமெரிக்கர்களின் மனங்களையும் கொள்ளையடித்து வரலாற்றின் ஒரு திருப்புமுனையாக அமெரிக்காவின் அதிபராக வீற்றிருக்கும் பராக் ஒபாமா.

மிஷேல் தன்னை நிராகரித்த போதிலும், மனம் தளரவில்லை ஒபாமா. தன் அபரிமிதமான அன்பை அவருக்கு தொடர்ந்து உணர்த்தியபடியேதான் இருந்தார். வேலையில் ஒபாமா காட்டுகிற ஈடுபாடு, சக மனிதர்களிடம் பழகும் தன்மை போன்றவற்றால் அவர் மீது ஏற்கனவே மிஷேலுக்கு இருந்த மரியாதை காதல் என்ற புதுவடிவம் எடுத்தது. ஒருநாள் தன்னுடன் வெளியே வரும்படி ஒபாமா அழைக்க உற்சாகமாக சம்மதித்தார் மிஷெல். அந்த முன்னிரவில் சின்ன புன்னகையுடன் மெல்லிய தலையசைப்புடன் ஒபாமாவிடம் தன் காதலைச் சொன்னார். வானமே வசப்பட்டது போல் பெருமிதம் கொண்டார் ஒபாமா.

அரசியல், சட்டம் உள்ளிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்ற ஒபாமா, படிக்கிற காலம் துவங்கி எளிய வர்க்கத்தினரது சமுதாய பொருளாதார முன்னேற்றத்துக்காக போராடியவர். மக்களுக்கு ஏதேனும் நன்மை செய்யவேண்டுமெனில், அரசியல்தான் சரியான களம் என்ற எண்ணம் கொண்டவர். மிஷெலின் காதலும், தோழமையும், அண்மையும் அவரை இன்னும் இன்னும் ஊக்கப்படுத்தின. சாதனைகள் பல புரியும் தன்மைகள் தமக்கு உண்டு என்ற நம்பிக்கை ஒளி பாய்ந்தது அவருக்குள்ளே.

ஹார்வர்டு லா ரெவியூ என்ற சட்டப் பதிப்பு நிறுவனத்தின் முதல் கருப்பினத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஒபாமா. மதிப்பு மிக்க இப்பதவியை அடுத்து சிகாகோ பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை கெளரவங்கள் மொத்தமும் அவரது க்ரீடத்திற்கு இறகுகளாயின.
நாடி வந்த கெளரவங்களும் தேடி வந்த பதவிகளும் ஒபாமாவின் அரசியல் வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போட்டன. 1990 ஆம் ஆண்டு அரசியலில் நிதானமாக அடியெடுத்து வைத்த ஒபாமா, அடுத்தடுத்து படுவேகமாக முன்னேறினார். ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரானவர், 1996-இல் இல்லினாய்ஸ் மாகாணத்தின் சட்டசபைக்கு தேர்வானார்.

இதற்கிடையே 1992 ஆம் ஆண்டு மூன்று ஆண்டு காதல் வாழ்க்கைக்குப் பிறகு அக்டோபர் 3 ஆம் தேதி, திருமண பந்தத்தில் இணைந்தனர் ஒபாமாவும் மிஷெலும். அன்பின் பரிசாக இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.
நிறைவான குடும்ப வாழ்க்கை என்ற பெரும் பலம் பின்னணியில் இருக்க, ஒபாமாவின் அரசியல் வாழ்க்கை ஒளிவீசத் துவங்கியது. அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. 2004 தேர்தலில் வென்று அமெரிக்க மேல்சபை உறுப்பினராகப் பதவியேற்றார். மக்களை மனதில் கொண்டு சீர்திருத்த நலச்சட்டங்கள் பலவற்றையும் அமல்படுத்தக் காரணமாக இருந்தார். 2007 பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். ஆனால் மிஷெலுக்கு அரசியல் ஆர்வம் துளியும் இல்லை. பிரச்சாரத்தில் சற்று சோர்வாகவே இருந்த மிஷெல் திடீரென்றுதான் விஸ்வரூபம் எடுத்தார். ஊர் ஊராகச் சென்று ஆயிரக்கணக்கான மக்களைச் சந்தித்து தீவிர பிரச்சாரம் செய்தார்.

அரசியலில் விருப்பமில்லாத நீங்கள் திடீரென்ற அரசியல் ஆர்வம் காட்டுகிறீர்களே ஏன் என்ற கேள்விக்கு, சிரித்தபடி மிஷெல் அளித்த பதில் என்ன தெரியுமா?
""தேர்தலில் என் ஆதரவு வேண்டுமெனில் சிகரெட் புகைப்பதை உடனே நிறுத்துங்கள் என்று அவரிடம் நிபந்தனை விதித்தேன். அவரும் உடனே புகைப்பதை நிறுத்தினார். நான் களமிறங்கிவிட்டேன் என்பதுதான்.""

அந்த அளவுக்கு மனைவி மேல் காதல் கொண்டவர் ஒபாமா. அந்த நேசத்தில் நெக்குருகிப் போன மிஷெல் வெறி கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 2008 நவம்பர் 4 ஆம் தேதி தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து பெரும் வெற்றி பெற்றார் ஒபாமா. இந்த சரித்திர வெற்றிக்குப் பின்னே ஒய்யாரமாக வீற்றிருந்தது அந்த சகாப்த காதல். 2009 ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் சர்வ வல்லமை படைத்த 44 வது அதிபராகப் பதவியேற்று, சரித்திரத்தில் தன்னைப் பதிவு செய்து கொண்டார் ஒபாமா. அமெரிக்காவின் முதல் பெண்மணியாக சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெள்ளை மாளிகையில் அடியெடுத்து வைத்துள்ளார் மிஷெல் ஒபாமா.

Wednesday, February 11, 2009

உப்பின் உபத்திரவங்கள்


பொதுவாகவே எல்லோரும் நிறையவே ஆரோக்ய விழிப்புணர்ச்சியுடன் செயல்படுகிறோம். கலோரி கான்ஷியசாகவும் மாறிவிட்டோம். மாறி வரும் இந்நிலையைப் பார்த்து பெருமையாக இருந்தாலும், ஒரு சிறு பிரச்சனை எங்கோ இருப்பதை இன்னும் நாமெல்லாம் சரிவர உணரவில்லை. அதுதான் நம் உணவில் சேர்க்கும் உப்பு. நம் தின்பண்ட சுவை கூட்டும் உப்பு நம் ஆரோக்யத்திற்கே வில்லனாக மாறிவிடும் அபாயமிருக்கிறது. விளைவு, ஸ்ட்ரோக், மாரடைப்பு முற்றுப்புள்ளியாக கடைசியில் இறப்பு.

ஒரு நாளில் எவ்வளவு உப்பு சாப்பிடலாம்?

** 0-6 மாத குழந்தைகள் ஒரு கிராம் உப்பை விடக் குறைவாக.
** 7 லிருந்து 12 மாத குழந்தைகள் 1 கிராம்.
** 1 முதல் மூன்று வருடக் குழந்தைகள் 2 கிராம்.
** 4 முதல் 6 வருடக் குழந்தைகள் 3 கிராம்.
** 7 லிருந்து 10 வருடக் குழந்தைகள் 5 கிராம்.
** பெரியவர்கள் 6 கிராம், அதாவது ஒரு டீஸ்பூன் உப்பு.

உணவில் அடங்கியுள்ள உப்பை அளப்பது கடினமாது. ஏனென்றால், காய்கறிகளிலும் பழங்களிலும் கூட உப்பு அடங்கியுள்ளது. ஆனால் கடைகளிலிருந்து வாங்கிய உணவுப் பண்டங்களில் ஒரு சிறு அட்டவணையில் உப்பின் அளவு சோடியம் என்ற பெயரில் பெரும்பாலும் குறிக்கப்பட்டிருக்கும். அதன்படி 0.5 கிராமுக்கு அதிகமாக சோடியம் அடங்கிய 100 கிராம் உணவுப் பொருட்கள் ஆரோக்யத்திற்கு அவ்வளவு உகந்ததல்ல.

பதப்படுத்தப்பட்ட உணவு, பதப்படுத்தப்பட்ட மாமிசம் எல்லா வகையான பதப்படுத்தப்பட்ட சீஸ் வகைகள், ஸ்நாக்ஸ், ப்ரெட் மற்றும் பிஸ்கெட் வகைகள், கடையில் வாங்கும் ஊறுகாய் வகைகள் உணவுக் காப்பினியான சோடியம்-பை-கார்பனேட் என அறியப்படும் பேக்கிங் சோடா, MSG என அறியப்படும் உணவுக்கு சுவை கூட்டும் மோனோ சோடியம் க்ளூக்கமேட் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

உப்பு அதிகம் சாப்பிட்டால் வரும் ஸ்ட்ரோக், உயர் ரத்த அழுத்தம், வயிற்று புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு போன்றவைகளால் பாதிக்கப்பட்டாலும் பெண்களின் கால்ஷியத்தை அழித்து எலும்புகளை பலவீனமாக்கி, ஆஸ்டியோபொரோஸிஸிடம் ஒப்படைத்துவிடும்.

Tuesday, February 10, 2009

நீங்களும் IAS ஆகலாம்


"ஐ.ஏ.எஸ்"., சொல்லும்போதே ஒரு இன்பமும், கம்பீரமும் தானாகவே தலை தூக்கும். நிறைய அதிகாரம் கொண்ட பதவி. அரசு சேவைகளில் ( போக்குவரத்து உட்பட ) நிறைய சலுகைகள் உண்டு. மற்றபடி சம்பளம் அதிகமென்று சொல்லிவிட முடியாது, என்றாலும் இந்தியாவை வல்லரசாக்கும் கனவு கொண்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கான அற்புத நுழைவாயில் இது.

சிவில் சர்வீசஸ் தேர்வு என்பது:
IAS ஆக சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும். அது சுலபமல்ல. சுமார் ஒரு வருடத்திற்காவது அது இழுத்துச் செல்லும். இந்த தேர்வுகளை நடத்துவது, UPSC ( UNOIN PUBLIC SERVICE COMMISSION). இந்த தேர்வுகளை எழுதுபவர் பல்வேறு அரசு பதவிகளில் சேர வாய்ப்பு உண்டு என்றாலும், பலரது கனவும் IAS தான். கலெக்டர் கனவு. தேர்வுகளில் க்ரூப் A வில் உச்சமாகக் கருதப்படுபவை IAS, IFS, IPS ஆகியவை. இதே பிரிவில் உள்ள பிற துறைகள் Customes, Excise, Revenue, Postal ஆகியவை. IAS, IPS பதவிகளில் இந்தியர்களுக்கு மட்டுமே அனுமதி. பிறவற்றுக்கு நேபாளம், பூடான், திபெத் அகதிகளுக்கும் அனுமதி உண்டு. பட்டதாரிகள் மட்டுமல்ல, பட்டப் படிப்பைக் கடைசி வருடம் படிப்பவர்கள் கூட இந்த தேர்வை எழுதலாம். 21/30 வயதுக்குள் அதிக பட்சம் 4 முறை எழுதலாம். OBC என்றால் 7 முறையும், SC/ST என்றால் எவ்வளவு முறை வேண்டுமானாலும் எழுதலாம்.

விண்ணப்பிக்கும் விவரம்:
நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் இதழில் இது குறித்த அறிவிப்பு வரும். போஸ்டல் ஆர்டர் அனுப்பி, UPSC அமைப்பிடமிருந்து விண்ணப்பத்தைப் பெறலாம். விண்ணப்பம் சுமார் இருபது ரூபாய். ஜனவரி மாதத்தின் ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டியிருக்கும். மார்ச் அல்லது ஏப்ரலில் ஹால் டிக்கெட் வந்துவிடும். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மூன்றாம் ஞாயிறன்று நுழைவுத் தேர்வு நடைபெறும். இறுதித் தேர்வு அக்டோபர், நவம்பரில் நடைபெறும்.

நுழைவுத் தேர்வு:
நுழைவுத் தேர்வில், பொதுக் கல்வி ( General Studies, 150 marks) விருப்பப் பாடம் (300 marks) என்று இரண்டு தாள்கள். இதில் நெகட்டிவ் மதிப்பெண் முறை உண்டு. அதாவது தவறான விடைகளைத் தேர்ந்தெடுத்தால் மதிப்பெண்களைக் குறைத்து விடுவார்கள். முதல் தாளில் இந்திய அரசியல், இந்தியப் பொருளாதாரம், இந்திய வரலாறு, சமீபத்திய நிகழ்வுகள், தினசரி அறிவியல், புள்ளி விவரங்களின் அடிப்படைத் தன்மைகள் ஆகியவை தொடர்பான கேள்விகள் இடம்பெறும். ஜூலை அல்லது ஆகஸ்டில் நுழைவுத் தேர்வின் ரிசல்ட் வெளியாகிவிடும். வென்றவர்கள் இறுதித் தேர்வை எழுதலாம்.

இறுதித் தேர்வு:
இறுதித் தேர்வில் ஒன்பது பேப்பர்கள்.
* பதினெட்டு இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்று.
* ஆங்கிலத் தகுதிக்கான தேர்வு.
மேற்கூறிய இரண்டும் தகுதிக்கானவை.
* ஒரு பொதுக் கட்டுரைத் தேர்வு. (அதிக மதிப்பெண் 200)
* இரண்டு பொது அறிவுத் தேர்வுகள்.(ஒவ்வொன்றிலும் அதிகபட்ச மதிப்பெண் 300).
* நான்கு விருப்பப் பாடங்கள் (ஒவ்வொன்றிலும் அதிகபட்ச மதிப்பெண் 300), (ஆங்கில பாடத்தைத் தவிர மற்றவற்றைத் தமிழ் மற்றும் பிராந்திய மொழிகள், ஹிந்தியிலும் எழுதலாம்).
இப்படி மொத்த மதிப்பெண்கள் இரண்டாயிரம். இதோடு நேரடித் தேர்வுக்கான முந்நூறு மதிப்பெண்களும் சேர்க்கப்பட்டு மிக அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு அவர்கள் விரும்பும் வரிசையில் ( பெரும்பாலும் IAS, IPS, IFS என்றுதான் இவை முறையே இருக்கும்), பதவிகள் அளிக்கப்படும். நேர்முகத் தேர்வு டெல்லியில்தான் நடக்கும். இதற்கு முந்நூறு மதிப்பெண்கள்.

டிப்ஸ்::
* கடந்த சில ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகளைக் கொண்டு இந்த இந்த பாடத்திலிருந்து இவ்வளவு கேள்விகள் கேட்பார்கள் என்று நினைத்தால் அது தவறு. அந்த அளவுகோல் சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்குப் பொருந்தாது. ஒருசில பொதுவான அனுமானங்கள் வேண்டுமானால் உதவலாம். உதாரணமாக, சமீப வருடங்களில் நுழைவுத் தேர்வில் முதல் தாளில், சமீபத்திய நாட்டு மற்றும் உலக நடப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
* நுழைவுத் தேர்வு, இறுதித் தேர்வு ஆகிய இரண்டிலுமே விருப்பப் பாடமாக ஒன்றையே எடுத்துக் கொள்வது நல்லது. இதனால் நேரமும் குறையும், ஆழமாகவும் படிக்கலாம்.
*எதில் மிக அதிக மதிப்பெண் ஸ்கோர் செய்ய முடியுமோ, அதை விருப்பப் பாடமாக தேர்வு செய்வது புத்திசாலித்தனம். Accountancy, வேதியியல் போன்ற பாடங்களில் சரியான விடை என்றால் முழுமையான மதிப்பெண்ணை கொடுத்தே தீர வேண்டும். ஆனால் இதெல்லாம் எப்போதும் எடுபடும் வாதமல்ல.
* ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரண்டு விருப்பப் பாடங்களை தேர்ந்தெடுத்தால், அவற்றில் சில பாடங்களாவது, இரண்டிலும் இடம் பெற்றிருக்கும். இயற்பியலும் வேதியியலும், விலங்கியலும் தாவரவியலும், பொலிட்டிகல் சயின்ஸும் வரலாறும், புவியியலும் சமூகவியலும் இப்படியாக ஜோடிகளை அமைத்துக் கொள்ளலாம். உங்கள் இரு விருப்பான பாடங்களுக்குமான தேர்வு நாட்களுக்கும் நடுவே போதிய இடைவெளி இருக்கும்படியான பாடங்களை தேர்ந்தெடுப்பது ஓர் உத்திதான்.
* விடைகளை வேகமாக எழுதத் தெரிந்திருக்க வேண்டும். காரணம், குறைந்த அவகாசமே இருக்கும்.
* சில பிரிவுகளில் சாய்ஸ் இருக்கும். அப்போது தகவல்களை அடிப்படையாகக் கொண்ட பதில்கள் எந்த கேள்விக்கு அமையுமோ அவற்றைத் தேர்ந்தெடுங்கள்.
* ஒரு முறைக்கு மேல், தேர்வை எழுத மனதைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். முதல் முறையே தேர்வில் வெற்றி பெற்று வந்தவர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள்.
* நாளிதழ்களைத் தொடர்ந்து படிக்க வேண்டும். ஆங்கில நாளிதழ்தான் ஏற்றது.
* Civil Services, Chronicle, Front Line, Competition Wizard, Competition Success & GK போன்றவை தேர்வுக்கு தயார் செய்ய பெரிதும் உதவுபவை.
* BA போன்ற பட்டப் படிப்பென்றால் இரண்டாம் வருடமும், BE போன்ற தொழில் முறைப் படிப்பு படித்தால் மூன்றாவது வருடமும் பயிற்சி வகுப்புகளில் சேருவது சிறப்பு.