Thursday, November 27, 2008

திருப்பதி திருமலை!!


திருப்பதி திருமலையில் இருக்கும் திருவேங்கடமுடையானுக்கு தனியாகப் பெயரில்லை. திருவேங்கடமுடையான் என்பது காரணப் பெயர். திருவேங்கடத்துக்கு சொந்தக்காரர். அதன் உரிமையாளர், அதன் உடையவர். திருவேங்கடமுடையான் என்ற பெயரை, வட மொழியில் சொல்வதானால் வேங்கடேஸ்வரர் என்று சொல்லலாம். அதாவது வேங்கடத்துக்கு உரிமையானவர் அல்லது ஈஸ்வரர். மற்ற கோவில்களில் இப்படி இல்லை. கபாலீஸ்வரரை மயிலாப்பூர்காரர் என்று எவரும் கூறுவதில்லை. மதுரையிலிருக்கும் கடவுளை மதுரைக்காரர் என்று எவரும் சொல்வதில்லை. பின் ஏன் இவரை மட்டும் வேங்கடமலையை மையப்படுத்திய காரணப் பெயரால் சொல்கிறோம்? அவருக்கென்று பெயர் இல்லையா? நம் முன்னோர்களான வேத கால ரிஷிகளும், சித்தர்கள், அகஸ்தியர் போன்றோர்களும், இவர் யார்? சிவனா, விஷ்ணுவா, சக்தியா, முருகக் கடவுளா ? என்று தெரியாமல் வியந்திருக்கிறார்கள். ஒரு உதாரணத்திற்கு, தாளப்பாக்கம் அன்னமையா இவர் பெயரில் 32 ஆயிரம் பாடல்களைப் பாடியுள்ளார். அப்பேர்ப்பட்ட அவருக்கே வேங்கடமுடையான் யார் என்ற சந்தேகம் ஏற்பட்டது. HMV கேஸட் நிறுவனத்தார் பாலாஜி பஞ்சரத்னம் என்ற பெயரில் கேஸட் வெளியிட்டனர். முதன் முதலாக எம்.எஸ்.சுப்பு லக்ஷ்மி அவர்கள் தாளப்பாக்கம் அன்னமையா பாடல்களை அதில் பாடினார்கள். அப்பாடல்களைத் தேர்வு செய்தவர் காஞ்சி பரமாச்சார்ய ஸ்வாமிகள். திருவையாறு தியாகய்யர் பூர்வி கல்யாணி ராகத்தில், நீ யார், சிவனா, விஷ்ணுவா, சக்தியா என்று தெரியவில்லையே என்று வேங்கடமுடையானை தரிஸனம் செய்த பிறகு பாடியிருக்கிறார். ஆகவே, மற்ற தெய்வங்கள் போல் வேங்கடமுடையானுக்கு தனி பெயர் கிடையாது.சுமார் 500 வருஷங்களாக இவருக்கு சீனிவாசன் என்ற பெயரும் உண்டு. குணசேகரம், உப்பிலியப்பன் கோவில், வையாவூர் மற்றும் பல விஷ்ணு கோவில்களிலும் உள்ள கடவுளர்க்கு சீனிவாசன் என்ற பெயர் உண்டு. யாரந்த சீனிவாசன்? க்ருஷ்ண பகவான் தான் வாசுதேவன், இவருடைய பிள்ளை ப்ரத்யும்னன். அனிருத்தன் க்ருஷ்ணனின் பேரன். இந்த வாசுதேவன் தான் சீனிவாசன். வாசுதேவன், ராமன், க்ருஷ்ணன், சீனிவாசன் எல்லாம் விஷ்ணுவின் அவதாரங்கள். மற்ற கோவில்களில் இருப்பது விஷ்ணு சிலைகள். அதனால் அக்கோவில்களில் இருக்கும் சிலைகளை சீனிவாசன் என்று அழைக்கலாம். திருமலை கோவிலில் இருப்பது திருவேங்கடமுடையான் சிலை. இந்த சிலை விஷ்ணு சிலை இல்லை. அதனால் இவரை சீனிவாசன் என்று அழைப்பது சரியில்லை. சீனிவாசன் என்ற் பெயர் ஏழுமலையானுக்கு பொருந்தாது. என்னதான் பெயர் மாற்றம் செய்தாலும், சங்கு சக்கரம் செயற்கையாக இருந்தாலும், திருவேங்கடமுடையான் விக்ரஹத்தில் விஷ்ணு அம்சம் 30 சதம்தான். மீதமுள்ள 70 சதவீதம் சிவாம்சமும், அம்பாள் அம்சமும் ஆகும். உலகிலேயே ஏழுமலையான் சிலையில்தான் யோக போக முத்திரைகள் இருக்கின்றன. இவை அலர்மேல் மங்கையின் அம்சங்கள். அலர்மேல் மங்கையும், ஏழுமலையானும் சேர்ந்து ஒன்றாக திருவேங்கடமுடையான் சிலையில் இருக்கிறார்கள். ஏழுமலையான் தானே அவதரித்த தம்பிரான் - சுயம்பு. தானே விரும்பி, சில ஸாமுத்ரிகா லக்ஷணங்களோடு தோன்றியிருக்கிறார். அதே போல் இவருக்கு ஸ்தல புராணம் கிடையாது. இப்போது இருக்கிற ஸ்தல புராணங்களில் பழமையானது வேங்கடாஜல மஹாத்மியம் ஆகும். இது 1491 ஆம் ஆண்டு மஸிண்டி வேங்கடதுரைவார் என்பவரால் இயற்றப்பட்டது. இதில் வராக, பத்ம, கருட, ப்ரம்மாண்ட, மார்கண்டேய, பவிஷ்யோத்ர, ஸ்கந்த, ஆதித்ய, வாமன, ப்ரம்மம் ஆகிய பத்து புராணங்களிலிருந்து வேங்கடேஸர் பற்றிய செய்திகள் தொகுப்பாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் திருவேங்கடமுடையானைப் பற்றிய விவரங்கள் இல்லை. திருமலையில் உள்ள தீர்த்தங்கள் மற்றும் மலைகள் பற்றிய விவரம் அதிகமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. திருவேங்கடமுடையான் எப்போது திருமலைக்கு வந்தார்? திருவேங்கடமுடையான் திருமலைக்கு வந்து 250 கோடி வருடங்கள் ஆகின்றன. இதன் ஆதாரம்., முதலில் அறிவியல் அடிப்படையில் ஆதாரத்தைப் பார்ப்போம். திருவேங்கடமுடையானின் கோவிலிலிருந்து, ஈஸான்ய திக்கில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், சில பாறைகள் இருக்கின்றன. இந்த பாறைகளுக்கு சிலா தோரணம் என்று சொல்லுவர். உலகத்திலேயே இந்தப் பாறைகள் இங்கு மட்டும்தான் இருக்கின்றன. இந்த பாறைகளின் நடுவே இருக்கும் துவாரத்திலிருந்து திருவேங்கடமுடையான் வெளிப்பட்டார் என்பது ஐதீகம். இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். திருவேங்கடமுடையானின் திருமேனியும், இப்பாறைகளும் ஒரே விதமானவை. மண்ணியல் (ஜியாலஜிஸ்ட்) நிபுணர்கள் இப்பாறையை ஆய்வு செய்து, 250 கோடி ஆண்டுகள் வயது கொண்டவை என கணக்கிட்டிருக்கிறார்கள். இரண்டாவதாக, பச்சை கற்பூரம் திருமேனிக்கு சாற்றுகிறார்கள். காலம் காலமாக, ஹிந்து அரசர்கள் ஆண்ட காலங்களிலிருந்து இந்த பச்சை கற்பூரம் ஒரு தாவர பொருள். சுமத்ரா, கம்போடியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் இப்போது பச்சை கற்பூரன் ஒரு கெமிக்கல்; அரிப்பைக் கொடுக்கும் ஒரு அமிலம். இந்த பச்சை கற்பூர கெமிக்கலை சாதாரண பூமியிலுள்ள கருங்கல்லில் தடவினால், கல் வெடித்து விடும். ஆனால் சிலா தோரணத்திலுள்ள பாறைகளில் இந்த கெமிக்கலைத் தடவினால், அப்பாறைகள் வெடிப்பதில்லை. அதே போல் திருவேங்கடமுடையானுக்கு 365 நாட்களும் பச்சை கற்பூரம் சாற்றினாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை. சிலா தோரண பாறைகளும், திருவேங்கடமுடையானின் பாறைகளும் ஒரே தன்மை கொண்டவை. மூன்றாவதாக, எந்த கருங்கல் சிலையானாலும் எங்கேயாவது ஒரு இடத்தில் சிற்பியின் உளி பட்டிருக்கும். எந்த உலோக சிலையானாலும், தங்கமாகட்டும், ஐம்பொன்னாகட்டும், உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். திருவேங்கடமுடையானின் சிலையில் எங்கும் உளி பட்ட அடையாளம் தெரியவில்லை. நான்காவதாக இவருடைய சிலை திருமேனி பளபளப்பாக இருக்கிறது. கருங்கல் சிலை மொரமொரப்பாக இருக்கும். கருங்கல்லுக்கு பாலிஷ் போடலாம். பாலிஷ் போட்டால் பள பளவென்று இருக்கும். ஆனால் அது மெஷின் பாலிஷ். மெஷின் பாலிஷ் வந்து சுமார் முப்பது வருடங்கள்தான் ஆகின்றன. தவிர மெஷின் பாலிஷ், தூண்கள், கம்பங்கள் போன்ற நேர்கோட்டுப் பொருட்களுக்குத்தான் போட முடியும்ல். நுணுக்கு வேலைப்பாடுகளுக்கு மெஷின் பாலிஷ் போட இயலாது. இவருடைய திருமேனி விக்ரஹத்தில் நெற்றிச்சுட்டி, காதணி, புருவங்கள் எல்லாம் பாலிஷ் போட்டவை போல் பள பளப்பாக இருக்கின்றன. ஐந்தாவதாக, இவருடைய திருமேனி எப்போதும் 110 பாரன் ஹீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை மூவாயிரம் அடி உயரத்திலுள்ள குளிர் பிரதேஸம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால் அபிஷேகம் முடிந்தவுடன் அவருக்கு வியர்க்கிறது. வியாழக் கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகை மற்றும் தங்க கவசங்களை கழற்றும் போது ஆபரணங்கள் எல்லாம் சூடாக கொதிக்கின்றன. இந்த தகவல்களை சுமார் நாற்பது வருஷங்களுக்கு முன்பிருந்த பிரபல சான்றோர்கள், அர்ச்சகர்கள், வேங்கடபதி தீக்ஷிதர், மணப்பாக்கம் சுந்தர ஆச்சாரியர், முல்லன்றம் கனபாடிகள் போன்றோர் சொல்லியிருக்கின்றார்கள். இவர்கள் ஸ்வாமிக்கு பல வருஷங்கள் அபிஷேகம் செய்தவர்கள். கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் சிவலிங்கத்திற்கு அருகில் மிகவும் குளிர்ச்சியான கற்கள் இருக்கின்றன. அவை சந்திரகாந்தக் கற்கள். அதேபோல உஷ்ணமாக திருவேங்கடமுடையான் திருமேனி இருக்கிறது. இந்த ஆதாரங்கள் எல்லாம் நேரடியாக பரிசோதித்துப் பார்க்கும்படி இருக்கின்றன. எந்த கோவிலிலும் இல்லாத சில சிறப்புகள் இந்த கோவிலில் இருக்கின்றன. அவற்றில் ஒன்று மந்திர புஷ்பம். இதற்கு மூர்த்தி மந்திரம் என்று பெயர். விடியற்காலையில் கோவிலில் பிரதான அர்ச்சகர் இந்த மந்திரத்தை சொல்லுவார். இந்த மந்திரத்தை சொன்னால் வேங்கடமுடையான் பிரசன்னமாகி விட்டார், சபை கூடி விட்டது என்று பொருள். .............

என்ன எப்போ கூட்டிட்டு போறீங்க ??


வணக்கங்க!! நான் பப்பி பேசறேன். தேன் நிறத்தில புசு புசுனு அழகா இருப்பேன். காதுகள் லேசா கருப்பா இருக்கும். வால் மட்டும் கொஞ்சம் நீளமா இருக்கும். நீங்களெல்லாம் உங்க அனுபவங்கள சொல்லும்போது நான் மட்டும் சொல்லக் கூடாதா? அதான் என்னோட வாழ்க்கையில் நடந்த சில, சுவாரஸ்யமான விஷயங்கள உங்களோட பகிர்ந்துக்க போறேன். நான் பொறந்த உடனே எங்கம்மா என்ன விட்டுட்டு எங்கேயோ போய்ட்டாங்க. பச்சை கொழந்தையா இருந்த என்ன, மெர்ஸி ஆன்டிதான் தூக்கி வளத்தாங்க. அவங்க பேருக்கு ஏத்த மாதிரி கருணையோட இருப்பாங்க. தினமும் எனக்கு முட்டை தருவாங்க. ஞாயிறு ஆனா மீன், ஆடு, கோழினு ஜமாய்ச்சுடுவாங்க. நான் அங்கே ராணி மாதிரி இருந்தேன். விக்டர் அங்கிள்.....அதாங்க மெர்ஸி ஆன்டியோட வீட்டுக்காரரு....ரொம்ப நல்லவரு. காலைல அவருக்கு பேப்பர் வாசல்லேந்து எடுத்துட்டு வந்து குடுப்பேன். அவர் எனக்கு பிஸ்கெட் போடுவாரு. அப்பறம் ஆன்டி மார்க்கெட் போனா துரத்திகிட்டே கூட போய்டுவேன். எனக்கு நிறைய சாப்பிட வாங்கி தருவாங்க. ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்க. அப்படி தாயா பிள்ளையா பழகின நாங்க பிரியற சந்தர்ப்பம் வந்துது. ஆன்டி ரொம்ப தவிச்சு போய்ட்டாங்க. விக்டர் அங்கிள் கூட கலங்கிட்டாரு. விக்டர் அங்கிளுக்கு ட்ரான்ஸ்பர் கிடைச்சு மும்பை போய்ட்டாங்க. ஆனா என்ன அனாதையா தெருவுல விடாம ராமு ஆசைப்பட்டான்னு என்ன அவங்கிட்ட குடுத்தாங்க. ராமுவோட அப்ப கிட்டு மாமா ரொம்ப கண்டிப்பானவர். கிட்டு மாமா அம்புஜ மாமி ரொம்ப அன்பானவங்க. ராமு எப்ப பாத்தாலும் எங்கூட விளையாடுவான். ஆனா மெர்ஸி ஆன்டி வீட்டுல கிடைக்காத சந்தோஷம் இங்க கிடைக்காட்டியும் ஓரளவுக்கு நிம்மதி இருந்திச்சு. வெறும் பால், தயிர் சாதம்தான். கொஞ்சம் இளச்சுட்டேன். ஆனாலும் பரவால்ல., தயிர் சாதமும் சூப்பரா இருந்திச்சு. ஒரு நாள் கிட்டு மாமா எங்கயோ அவசரமா போய்ட்டு இருந்தாரு. நான் குறுக்கே ஓடி வந்துட்டேன். அவ்வளவுதான் மாமா ருத்ர தாண்டவம் ஆடிட்டார். இந்த சனியன எங்கருந்து கொண்டு வந்தீங்க?? இத மொதல்ல ஒழிச்சு கட்டணும்னு கத்தினார். எத்தனையோ முறை நான் வெளில போகும்போது அவர் குறுக்க வந்திருக்கார். நான் இப்படி கத்தினேனா?? அபசகுனம்னு சொன்னேனா? ஆனா என்ன விட மாமிதான் ரொம்ப வாடி போய்ட்டா. கிட்டு மாமா என்ன விடவே இல்ல....அடிச்சு துரத்திட்டா. ரெண்டு நாள் அலஞ்சேன். அப்பறம் ஒரு குப்பத்துக்குள்ள போனேன். அங்க முனியம்மா வீட்டுகிட்ட போய் நின்னேன். சாப்பிட்டுகிட்டே இருந்தாங்க. என்ன பாத்ததும் எனக்கும் கொஞ்சம் போட்டாங்க. நான் வாலை ஆட்டிகிட்டே நின்னேன். அங்கேயே தங்கிட்டேன். காலம் அப்படியே போச்சு. முனியம்மாவுக்கு ரெண்டு பசங்க. அவங்கள நல்லா படிக்க வெக்கணும்னு முனியம்மாவுக்கு ஆசை. ஆனா அவ புருஷன் தண்ணியடிச்சே எல்லாத்தையும் அழிச்சான். தினம் அடி உதை சித்ரவதைதான். ஏதாவது உதாரணம் சொல்லணும்னா நாய் பொழப்புனு சொல்லுவாங்க. ஆனா இந்த மாதிரி சில மனிஷங்க பொழப்புக்கு நாய் பொழப்பு எவ்வளவோ தேவலாம். ஒரு நாள் நான் அஞ்சு குட்டிங்கள பெத்தேன். எல்லாம் பக்கத்து தெரு கருப்பு நாயோட ஏற்பட்ட லவ்ஸ் தான். குட்டிங்க எல்லாம் அவ்வளவு அழகு....என்ன மாதிரியே!! அழக பாத்து எல்லாரும் விலைக்கு கேட்டாங்க. பாவம் முனியம்மாவும் தயங்கிகிட்டே விலைக்கு குடுத்துட்டா. எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு. நாயானாலும், பேயானாலும் தாய் தாய்தானே!! இரண்டு மூணு நாள் சரியா சாப்பிடல. சரி முனியம்மாவோட குழந்தைங்க படிப்பு செலவுக்கு ஆகுமேன்னு மனச தேத்திகிட்டேன். ஒரு நாள் முனியம்ம புருஷன் முனியம்மாவோட சண்டை போட்டுகிட்டு இருந்தப்போ, நான் போய் பயங்கரமா குரைச்சேன். அவனுக்கு வந்ததே ஆத்திரம்!! என்னை வீட்ட விட்டே துரத்தி விட்டுட்டான். எனக்கு இப்ப யாருமே இல்லை. யாராவது என்ன உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போவீங்களா? என்னோட அடையாளம் தெரியுமில்லையா? தேன் நிறத்துல அழகா புசு புசுன்னு இருப்பேன். காதுகள் கொஞ்சம் லேசா கருப்பா இருக்கும். வால் மட்டும் கொஞ்சம் நீளமா இருக்கும். பப்பினா வாலாட்டுவேன்.

கவர்ச்சி கன்னி கிளியோபாட்ரா


எகிப்திய சாம்ராஜ்யத்தின், தலைநகர் அலெக்ஸான்ட்ரியாவில், ரோமானியப் படைகள் சூழ்ந்து கொண்டிருந்தன. ரோமானியர்களின் ஒரே நோக்கம், முப்பத்து ஒன்பதே வயதான எழிலரசி, எகிப்திய பேரரசி க்ளியோபாட்ராவை உயிருடன் பிடிப்பதுதான். அவளை சங்கிலிகளால் பிணைத்து, ரோமாபுரி வீதிகளில் இழுத்துச் சென்று, ரோமானியர்களே பாருங்கள்!! பேரழகி க்ளியோபாட்ரா இனி நம் அடிமை!! நமக்கு தொண்டு செய்து வாழ்வதுதான் அவளது ஒரே கடமை என்று மக்களிடம் அவளைக் காட்சிப் பொருளாக்கிக் காட்ட அவர்கள் துடித்துக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில், அத்தனையையும் இழந்து விட்டிருந்தாள் க்ளியோபாட்ரா, இருந்தும், தன் காதலுக்காகவும், காதலனுக்காகவும் மட்டுமே வாழ்வது என்று தீர்மானித்திருந்தாள். விதியின் எண்ணம் வேறாக இருந்தது. அவளுடைய காதலன் அவள் கண் முன்னே உயிரிழந்தான். இனி வாழ்வில் ஒன்றுமே இல்லை என்ற நிலை; எனவே, எஞ்சியிருந்த மானத்துடன், அவளும் உயிர் துறக்கத் தீர்மானித்தாள். தனக்கான கல்லறையை அமைத்து அதில் நுழைய இருந்த தருணத்தில் அவளை சிறை பிடித்தனர் ரோமானியர்கள். ரோமாபுரிக்கு செல்லும் முன் தற்கொலை செய்து கொண்டு விட்டால் என்ன ஆவது என்று அவளை கண்காணித்தபடி இருந்தனர். அடுத்த நாள் காலை, க்ளியோபாட்ராவுக்கு உணவுப் பொருட்கள் வந்து சேர்ந்தன. அவற்றில் பழக்கூடை ஒன்றும் இருந்தது. ஒவ்வொன்றையும் எச்சரிக்கையுடன் சோதித்து விட்டுதான் காவலர்கள் அனுமதித்தார்கள். அதே நேரம், அருகிலேயே முகாமிட்டிருந்த ரோமானிய அரசன், அக்டேவியனுக்கு செய்தி ஒன்று வந்து சேர்ந்தது. அரசன் அதனைப் படித்தான்; " எனது காதல் நாயகன், ஆன்டனியின் கல்லறையிலேயே, என்னையும் அடக்கம் செய்து விடு" : க்ளியோபாட்ரா....... பதறிப் போனான் மன்னன். க்ளியோபாட்ரா தற்கொலை செய்து கொள்ள முயல்கிறாள் என்று புரிந்து அவள் இருந்த இடத்திற்கு ஓடோடி வந்தான். ஆனால், தங்கக் கட்டிலில், சயனக் கோலத்தில், ஒயிலாகக் காட்சி தந்த அவளது, உயிரற்ற உடலைத்தான் அவனால் பார்க்க முடிந்தது. காலருகே, அந்தரங்கப் பணிப்பெண் ஒருத்தியின் உடல் கிடந்தது. உயிர் துறந்த, அரசியின் தலைக் கிரீடத்தை, சரியாகப் பொருத்திக் கொண்டிருந்த இன்னொரு பணிப் பெண்ணும், அவன் எதிரிலேயே சுருண்டு விழுந்து மாண்டாள். பழக் கூடைக்குள், சாமர்த்தியமாகக் கொண்டு வரப்பட்ட, விஷ நாகத்தின் பற்குறிகள் க்ளியோபாட்ராவின் கையில் தெரிந்தன. அது மரணத்தின் காரணத்தைப் பறைசாற்றியது. எகிப்திய சாம்ராஜ்யத்தின் கடைசி அரசி, தனது இறுதி விருப்பத்தின்படி, தன் காதலனுக்கு அருகிலேயே மீளாத் துயில் கொண்டாள். இவ்வாறு முடிந்த, புகழ் பெற்ற் அந்த துயர நாடகம் துவங்கியது கி.மு. 69 ஆம் ஆண்டில்.

எகிப்து அரசன், பன்னிரெண்டாம் டாலமியின் மகளாகப் பிறந்தாள் க்ளியோபாட்ரா. கி.மு. 51 இல் தந்தையின் மறைவுக்குப் பின் இளைய சகோதரன், பதிமூன்றாம், டாலமியுடன் இணைந்து எகிப்திய சாம்ப்ராஜ்யத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றாள். அப்பொழுது அவள் வெறும் 18 வயது பாவை. தேன் போன்ற மென்குரல், பார்ப்பவரையே கிறங்கடிக்கும் கவர்ச்சி, இவற்றுடன் அந்த வயதிலேயே, ஒன்பது மொழிகளைப் பேசும் திறமை, பேரறிவு, அரசியல் சாணக்யம், எதையும் எதிர்கொள்ளும் துணிவு ஆகியவற்றால் தேர்ந்த அரசியாக விளங்கினாள். ஆனால் அவளது வளர்ச்சி அநேகம் பேருக்கு பொறாமையை அளித்தது. அவள் சகோதரனுடைய ஆலோசகர்களின் சூழ்ச்சியால், க்ளியோபாட்ரா ஆட்சியை இழந்தாள். அண்டை நாட்டில் தஞ்சமடைந்தாள். அப்போதுதான் அப்பெரும் திருப்பம் நிகழ்ந்தது. ரோமானிய மாவீரன் ஜூலியஸ் சீஸர் அப்போது, எகிப்த்துக்கு வர நேர்ந்தது. அவனது ஆதரவுடன், ஆட்சியை மீண்டும் கைப்பற்ற முடியும் என எண்ணிய க்ளியோபாட்ரா, அவனை சந்திக்க முடிவு செய்தாள். பகிரங்கமாக, எகிப்துக்குள் நுழைந்தால் எதிரிகளால் அவளது உயிருக்கே ஆபத்து; பிறகு சீஸரை சந்திப்பது எப்படி?? ஜூலியஸ் சீஸருக்கு அளிக்கப்பட்ட பல பரிசுப் பொருட்களில், சுருட்டப்பட்டிருந்த, ஒரு அழகிய கம்பளமும் இருந்தது. அவனுக்கு எதிரில் மெதுவாக உருட்டி விரிக்கப்பட்ட, அந்த கம்பளத்திலிருந்து பளீரென வெளிப்பட்டாள் கவர்ச்சிக் கன்னி க்ளியோபாட்ரா. கண்டதும் அவள் மேல் காதல் வசப்பட்டான் மாவீரன். தன் காதலுக்காகவும், காதலிக்காகவும் எதையும் செய்யத் தயாராக இருந்த அவன், தனது படை பலத்தால் எகிப்தை வென்றான். அதை காதலின் காணிக்கையாக அவள் காலடியில் சமர்ப்பித்தான். காதல் மயக்கத்தில் பறந்தது காலம். ரோமானிய வீரனும் எகிப்த்திய அரசியும், அழகிய நைல் நதியில் கவிதைகள் பாடி, தோணிகள் ஓட்டி மகிழ்ந்தனர். காதலின் பரிசாக ஒரு மகனையும் அவனுக்கு ஈன்றெடுத்தாள் க்ளியோபாட்ரா.... மகனுடன் ரோமாபுரியில் கால் பதித்த க்ளியோபாட்ராவை, ஒரு தேவைதையாக வரவேற்றான் சீஸர். ஊர்வலமாக அழைத்துச் சென்று மக்களுக்கு அறிமுகப் படுத்தினான். அவளது சிலையையும் நிறுவி அவளை கௌரவித்தான். ஆனால் சீஸரின் அதிகாரத்தையும், க்ளியோபாட்ராவை ரோமாபுரி மஹாராணியாக அமர்த்தியதையும், பொறுக்காத சதிகாரர்கள், கி.மு.44 இல் சீஸரை வஞ்சித்துக் கொன்றனர். துடித்துப் போன க்ளியோபாட்ரா குழந்தையுடன் தன் நாட்டிற்கு தப்பி வந்து சேர்ந்தாள்.

அரசியல் மாற்றங்கள் பல அரங்கேறின......... ரோமானிய சாம்ராஜ்யத்தில், அக்டேவியன் என்பவனும், மார்க் ஆன்டனி என்பவனும், ரோமாபுரியின் வெவ்வேறு பகுதிகளை ஆளத் தொடங்கினர். கி.மு. 42 இல் அரசியல் காரணங்களுக்காக, எகிப்த்துக்கு வந்த மார்க் ஆன்டனி க்ளியோபாட்ராவை சந்தித்தான். அவள் மீது மீளாக் காதல் கொண்டான். தன் காதலை அவளிடம் சேர்ப்பிக்கத் தவித்தான். தன் கணவனை இழந்த துக்கத்தில், உயிர் சுமந்த உடலாக இருந்த க்ளியோபாட்ராவிற்கு, அவனுடைய அறிமுகம் ரணமாற்றும் மருந்தாக இருந்தது. வார்த்தைகள் வளர்ந்து, நட்பானது. நட்பின் கரிசனம் அன்பு சேர்த்தது. அன்பு முதிர்ந்து காதலானது. வாழ்வில் மீண்டும் வசந்தம் துளிர்த்தது. இருவரும் இணைந்து தனித்ததோர் உலகம் படைத்தனர். காதல் கீதம் பாடி சிறகடித்துப் பறந்தனர். ரோமானிய மன்னன் ஆன்டனியின் உலகமே தலைகீழாக மாறிப் போனது. எகிப்தே அவனது தேசமானது. க்ளியோபாட்ராவே அவனது உலகமானாள். ஆன்டனி ரோமாபுரியை மறந்தாலும், அந்நாடும், அவன் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்த பல சக்திகளும், அவனுக்கு எதிராகக் கிளம்பத் தொடங்கின. தாய் நாட்டைத் துறந்து, வேற்று நாட்டு அரசியுடன் கூடிக் குலாவிய ஆன்டனிக்கு எதிராக, மக்களைத் தூண்டி விடுவது அக்டேவியனுக்கு ஒன்றும் பெரிய காரியமாக இல்லை. ரோமானியர்கள் எகிப்து மீது போர் தொடுத்தார்கள். ஆன்டனி, க்ளியோபாட்ராவின் கடற்படைக்கு தலைமை தாங்கி, ரோமானிய கடற்படையை எதிர்த்து சென்றான். கடல் போர் துவங்கியது. ஆன்டனி வீராவேசமாகத் தான் போரிட்டான். ஆயினும், மாபெரும் ரோமானியக் கடற்படைக்கு எதிராக அவனது கரம் தாழ்ந்தது. அவனது படை தோல்வியை நோக்கி முன்னேறியது. அந்த கெட்ட செய்தி எகிப்தை அடைந்தது. தோல்வி நெருங்குவதை உணர்ந்த க்ளியோபாட்ரா தனக்காகவும், காதல் நாயகனுக்காகவும் கல்லறை ஒன்றை அமைத்தாள். அதில் குடி புகுந்தாள். அங்கே கடலில் அடுத்தடுத்து தோல்விகளால், மனம் வெதும்பி கிடந்தான் ஆன்டனி. அந்த தருணத்தில் க்ளியோபாட்ரா மரணமடைந்து விட்டாள் என்ற தவறான செய்தி அவனை சென்றடைந்தது. ஐயோ!! நான் உயிர் வாழ இருந்த ஒரே காரணமும் முடிந்தது., அன்பே இதோ நானும் வந்தேன் உன்னுடன்!! என்று கதறிய ஆன்டனி தன் வாளை வயிற்றில் பாய்ச்சிக் கொண்டு மயங்கி விழுந்தான். அரசியின் உதவியாளர்கள் அவனை எடுத்துக் கொண்டு போய், க்ளியோபாட்ராவிடம் சேர்த்தனர். மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்த காதலனைப் பார்த்துக் கதறினாள் அவள். குற்றுயிராய் இருந்த அவன், கலங்காதே!! நம் காதலை நினைவு கொள்!! நம் காதல் வாழும் என்று கூறி அவளது கரங்களில் உயிர் துறந்தான். நேர்ந்த பேரிழப்புக்கு துக்கப் படக் கூடத் திராணி இல்லை அவளிடம். சூழ்ந்து கொண்ட எதிரிகளிடம், தனது காதலனை நல்லடக்கம் செய்ய அனுமதி கோரி பெற்றாள். ஓர் அரசனுக்குரிய அனைத்து மரியாதைகளுடனும், தன் அன்புக் காதலனை கல்லறையில் இட்டாள். பெரும் காதலுடன் வாழ்ந்த அவள், அப்போது விரும்பியதெல்லாம், மானத்துடன் இறப்பதையே!! எதிரிகளின் கண்களில் மண் தூவி, கொடும் விஷத்தால், மரணத்தை தழுவியது அவளது வாழ்க்கை.

காதலர்கள் மடிந்திருக்கலாம், அவர்களது மேனி புதையுண்டு, மண்ணோடு மண்ணாகியிருக்கலாம். ஆனால், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும், இன்றளவும் அவர்கள் நினைவு கொள்ளப் படுகிறார்கள் என்றால், அவர்களது காதல் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதால்தான். உலக அழகி என்று ஆராதித்த அவளுக்கு, தன் காதலனுக்கு அருகிலேயே அடக்கம் செய்யப் படுவதுதான் வாழ்வின் பயனாகியுள்ளது. அதுதான் காதலின் அழகோ??

பல் சிகிச்சை


பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வடிய பொதுவாக இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று ஈறுகளில் அழுக்கு சேர்ந்திருப்பது. இன்னொன்று வைட்டமின் குறைபாடு.பல் மருத்துவரிடம் சென்று பல்லை சுத்தம் செய்வது மூலம் , ஈறுகளில் சேர்ந்திருக்கும் அழுக்கை நீக்கி விடலாம். வைட்டமின் குறைபாடு என்றால் மருத்துவரின் ஆலோசனைப்படி அதற்கான மாத்திரைகளை எடுத்து கொள்ள வேண்டும்.
உங்களின் அடுத்த பிரச்சனை பல் தேய்மானம். கிருமிகள் நமது பல்லை அரித்து அதை தேய செய்வதை சொத்தை பல் என்கிறோம். ஆனால் கிருமிகளே இல்லாமல் இயற்கையாக நமது பல் தேய்ந்து போவது தான் பல் தேய்மானம். வேகமாக பல் துலக்குவது, வெகு நேரம் பல் துலக்குவது, அதிக அமிலதன்மை உள்ள உணவுகளை உண்பது போன்ற காரணங்களால் பற்களின் வெளிப்புற சுவரான எனாமல் தேயும். சிலருக்கு இந்த தேய்மானம் தீவிரமடைந்து பல்லின் வேர் வரை கூட பாதிப்பை ஏற்ப்படுத்தும்.பல் சிகிச்சைக்கான சிமென்டை பாதிக்கபட்ட பல்லின் தேய்ந்த பகுதியில் வைத்து பூசி விடுவதே இதற்கான சிகிச்சை. தற்காலிகமான சிகிச்சை முறை , நிரந்தர சிகிச்சை முறை என இதிலும் இரண்டு வகை உண்டு...... தற்காலிகமான சிகிச்சை முறையின் பலன் இரண்டிலிருந்து மூன்று மாதங்கள் வரை நீடிக்கும். நிரந்தர சிகிச்சை முறை மூன்றிலிருந்து ஐந்து வ‌ருட‌ங்கள் வ‌ரை நீடிக்கும். அத‌ன் பின் மீண்டும் ப‌ற்க‌ளில் பாதிப்பு ஏற்ப்ப‌ட்டால் இந்த‌ சிகிச்சையை மீண்டும் எடுத்து கொள்ள‌ வேண்டிவ‌ரும்......

கல்லுக்குள் ஈரம்


1945 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், 29 ஆம் தேதி அதிகாலைஇவா ப்ரெளன் என்னும் பெயர் கொண்ட அந்த அழகிய பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம் அந்த அதிகாலை. ஏறக்குறைய 16 ஆண்டுகளாக அவள் அந்த தங்கத் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். ஆம்!! 16 ஆண்டுகளாக அவள் உயிருக்கு உயிராக காதலித்துக் கொண்டிருந்த அவளுடைய காதலன் அவளை அந்த தருணத்தில் மணம் புரிந்து கொள்ளப் போவதாக வாக்களித்திருந்தான். ஜெர்மெனியின் தலைநகரான பெர்லினில் ஒரு மாபெரும் மாளிகயில் ரகசியத் திருமணம் என்று முடிவாகியிருந்தது. அதிகாலைப் பொழுதில் திருமணத்தை நடத்தி வைக்க பாதிரியார் ஒருவர் ரகசியமாக மாளிகைக்கு அழைத்து வரப்பட்டார். இவா ப்ரெளன் மணப்பெண்ணுக்கு உரிய பளபளப்பான கரிய நிற ஆடையை மகிழ்வுடன் அணிந்து கொண்டாள். மணமகனும் அலங்கரித்துக் கொண்டான். இருவரையும் பாதிரியார் அருகருகே நிற்க வைத்து திருமணத்திற்கு ஒப்புதல் கேட்டார். இவா ப்ரெளன் உதிர்த்த சம்மதம் என்ற ஒற்றை வார்த்தையில் ஆயிரம் சம்மதங்கள் இணைந்திருந்தன. அவளுடைய காதலனும் ஒப்புதல் அளித்தான். பாதிரியார் மண மக்களிடம் மோதிரம் மாற்றிக் கொள்ள சொன்னார். இவா ப்ரெளன் மிகவும் நெகிழ்ந்திருந்த தருணம் அது. கண்களில் கரை கட்டியிருந்த கண்ணீரை வெளிப்படுத்தாமல், காதலனின் விரலில் மோதிரத்தை மாட்டினாள். அவள் காதலனும் அவளுடைய விரலில் மோதிரத்தை மாட்டினான். பாதிரியார் இருவரையும் முத்தமிட்டுக் கொள்ளச் சொன்னார். இவா ப்ரெளன் இத்தனை நாள் தனது இதயத்தில் தேக்கி வைத்திருந்த காதலை எல்லாம் திரட்டி தனது ஈர இதழ்களினூடே தனது உயிரையே காதலனின் உடலில் செலுத்தி விடும் ஆவேசத்துடன் முத்தமிட்டாள். அந்தத் திருமணம், வெகு ரகசியமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மணமகனுக்கு மிகவும் நெருக்கமான இரு நண்பர்கள் மட்டும் அங்கே கூடியிருந்தனர். சோகம் கப்பிய முகத்துடன், காட்சியளித்த அவர்கள், சோகையாகக் கை தட்டினார்கள். அதற்கு அடுத்த நாள், திருமணம் நடந்தேறிய 30-ஏ மணி நேரத்தில் அந்தப் புது மணமகனும்ம் மணப்பெண்ணும், கொடிய சயனைடு விஷமருந்தி அதே மாளிகையில் தற்கொலை செய்து கொண்டு மடிந்தனர். தற்கொலையில், தனது மகத்தான வாழ்க்கையை முடித்துக் கொண்ட அந்த மணமகன், "அடால்ப் ஹிட்லர்". உலகின் மிகப்பெரும் சாபக்கேடு என வர்ணிக்கப்பட்ட, ஜெர்மானியக் கொடுங்கோலன், 1930 மற்றும் 40 களில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றை நசுக்கி அப்பாவி மக்களை, லட்சக் கணக்கில் சித்ரவதைக்கு உள்ளாக்கிக் கொன்றவன். அவன் வாழ்விலும் ஒரு காதல். அந்த உன்மத்தனை, சர்வாதிகாரியை, உலகின் மிகக் கொடூரமான கொலை காரனை அவ்வளவு ஆழமாக நேசிக்கவும் ஒருத்தி இருந்தாள்.

கான்வெண்ட் படிப்பை முடித்து, பள்ளியிலிருந்து அப்போது தான் வெளியே வந்திருந்தாள் இவா ப்ரெளன். இளமை அவளை உலக அழகியாக ஊருக்குக் காட்டியது. அவளிடம் தங்களது காதலைச் சொல்லி ஏமாந்து போனவர்கள் ஏராளம். யாரையும் அவள் ஏறிட்டுக் கூடப் பார்க்கவில்லை. தன்னுடைய பதினேழாவது வயதில், ஹிட்லரின் அந்தரங்கப் புகைப்படக் கலைஞர், ஹாப்மேன் என்பவனின் உதவியாளராக அவள் பணியாற்றாத் துவங்கினாள். அதுவரை ஹிட்லர் என்ற பெயரைக் கேள்விப் பட்டிருந்தாளேயொழிய ஒருநாளும் அவனைப் பார்த்ததில்லை. ஒருநாள், அவளை விட 23 வயது மூத்தவரான ஹிட்லருடன், எதிர்பாராத சந்திப்பு நிகழ்ந்தது. அந்த சந்திப்பில்தான் இவா ப்ரெளனின் வாழ்க்கை தடம் புரண்டது. வாழ்க்கை என்று எனக்கு, ஒன்று இனி இருந்தால் அது ஹிட்லருடன் தான் என்று அந்த முதல் சந்திப்பிலேயே அவள் முடிவு செய்தாள். அந்தக் காதலுக்கு நிச்சயம் உடல் கவர்ச்சி ஒரு காரணம் அல்ல. பின் அந்தத் தருணத்தில், அவளது உள்ளத்தில் ஹிட்லர் மேல் அவ்வளவு ஆவேசமான காதல் அரும்பியது எதனால்? இவா ப்ரெளனுக்கே அந்தக் கேள்விக்கான விடை தெரியவில்லை. அதன் பிறகு இவ்வுலகில் இருந்த அடுத்த 16 ஆண்டுகளும், அந்தப் பேதைப் பெண் வாழ்ந்தது ஹிட்லருக்காக மட்டுமே. அவள் மடிந்ததும் அவனுக்காகத்தான். பெற்றோர்களின் எதிர்ப்பு, சமுதாயத்தின் நிராகரிப்பு, எதனாலும் அவளை மாற்ற இயலவில்லை. ஜெர்மானிய அரசியலில், வேகமாக வளர்ந்து கொண்டிருந்த ஹிட்லர் மக்களிடம் தன் செல்வக்கை நிலைநாட்டிக் கொள்ள அவளுடனான உறவை வெளிப்படுத்தாமல் ரகசியமாகவே வைத்திருந்தான். இவா ப்ரெளனுக்கு அது கொச்சையாகத் தெரியவில்லை. ஜெர்மானிய அதிபரின், பட்ட மகிஷி என்ற கெளரவமும், ஹிட்லருடன் பகிரங்கமாக பவனி வரும் அதிர்ஷ்டமும் அவளுக்கு இல்லை. மனித உருவில் வலம் வரும் ஆட்கொல்லி மிருகம் என்று உலகமே அவள் காதலனைத் தூற்றியதையும் அவள் பொருட்படுத்தவில்லை. ஹிட்லர் பல நேரங்களில், இவா ப்ரெளனைத் தன்னை விட எல்லா வகையிலும், தாழ்ந்த பிறவியாகக் கருதினான். அவள் மீது சாதாரணப் பரிவு காட்டுபவனாகக் கூட நடந்து கொண்டதில்லை. இருப்பினும் இவாவின் காதலும், விஸ்வாசமும் எள்ளளவும் குறையவில்லை. கொலை முயற்சி ஒன்றிலிருந்து, ஹிட்லர் தப்பித்த போது அவள் அவனிடம் சொன்னாள்........" அன்பே!! நான் வாழ்வது உன் மீதுள்ள காதலினால் மட்டும்தான். என் வாழ்வும், நீ மூச்சை நிறுத்தும் வரைதான்". ஹிட்லரின் இதயத்தை நனைய வைத்தது இந்த ஈர வார்த்தைகள்தான். அவனது இரும்பு இதயத்தை அடர்த்தி குறையாத பாதரஸமாக உருக்கியதும், இதே ஈர வார்த்தைகள்தான். 1945- இல் உலகை உலுக்கிய உலக மகா யுத்தம் முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. மனித குலத்தையே அச்சுறுத்திக் கொண்டிருந்த ஹிட்லரின் ஜெர்மானியப் படை போரில் பெரும் தோல்வியை சந்தித்துக் கொண்டிருந்தது. ரஷ்யப் படைகள், ஜெர்மெனி நாட்டின் பல பகுதிகளைக் கைப்பற்றி, தலைநகர் பெர்லினை சுற்றி வளைத்துக் கொண்டன. ஹிட்லரை எப்படியாவது உயிருடன் பிடித்து விட வேண்டும் என்பதுதான் அந்தச் செம்படையின் ஒரே நோக்கம். எஞ்சியிருந்த ஹிட்லரின் தோழர்கள் தப்பித்து ஓடிக் கொண்டிருந்தனர். மரணம் தன் கைகளை அகல விரித்துக் காத்திருந்த அந்த நேரத்தில் ஹிட்லர் இவா ப்ரெளனிடம், தன்னை விட்டு விலகச் சொன்னான். இவா ப்ரெளன் சம்மதிக்கவில்லை. ஹிட்லரின் இதயம் இன்னும் இளகியது. இவா ப்ரெளனிடம் தனது காதலைத் தெரிவித்தான். மணந்து கொள்ள சம்மதித்தான். ஹிட்லர் மாளிகையும், பாதாள நிலவறையில், இரண்டே இரண்டு பேர் சாட்சியாக இருக்க, இவா ப்ரெளன் அடால்ப் ஹிட்லரைக் கைப்பிடித்தாள்.

பளபளக்கும் கருப்பு நிற ஆடையில், வெட்கத்திலும், முகம் நிறைந்த புன்னகையிலும், ஜொலித்த அந்தப் புதுமணப் பெண், திருமணச் சான்றிதழில், இவா ஹிட்லர் என்று மிகப் பெருமிதத்துடன் கையெழுத்திட்டாள். தன் உயிர்க் காதலனுடன், ஒருநாள், ஒரே ஒருநாள், திருமண வாழ்க்கை நடத்திய நிறைவுடன், அடுத்த நாள் பகலில் ஹிட்லருடன் சேர்ந்து விஷமருந்தி, உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். அப்போது அவளுக்கு வயது 33. யாருக்காக வாழ்ந்தாளோ, அவனுக்காகவே அவனுடனேயே, அவள் வாழ்க்கையும் முடிந்தது.

ஆனால் ஹிட்லரின் மரணம் பற்றி பல்வேறு யூகங்கள் நிலவுகின்றன.
ரஷ்யப் படைகள் பெர்லினைக் கைப்பற்றி அவரது பதுங்குமிடத்தை நெருங்கியவுடன், தற்கொலை முயற்சியாக, முதலில் விஷத்தை தனது நாய்க்கும், இவா ப்ரெளனுக்கும் பிறகு தானும் உட்கொண்டிருக்கிறார். ஆனால் இவாவும், நாயும் விஷத்தால் இறந்து விட ஹிட்லர் மட்டும் இறக்கவில்லை. எனவே, துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இறந்ததாகவும் கூறப்படுகிறது............................

எது எப்படியோ.......கொடியவன் ஒருவனிடம், இதயத்தைப் பறி கொடுத்து அவனுக்காகவே வாழ்ந்து மடிந்த, ஒரு சாதாரணப் பெண்ணின் கதை மட்டும்தானா இது?? அல்லது காவியக் காதலின் இலக்கணம் இதுவென வகுத்து தந்து சென்ற தேவதை ஒன்றின் வாழும் சரித்திரமா?........

தேங்காய் எண்ணையில் ஆபத்து கிடயாது


கல்ப விருட்சம் என தென்னயை நம் முன்னோர்கள் வர்ணித்து ஒரு புனித அந்தஸ்தை வழங்கி இருக்கிறார்கள்.பூஜையிலும் சரி பண்டிகைகால பலகாரங்களிலும் சரி தேங்காய், தேங்காயெண்ணைக்கு தான் முக்கியத்துவம்.ஆனால் சமீப காலமாக நம் உணவில் ‌தேங்காய் சேர்ப்பதயே குறைத்து விட்டோம். இதற்கு காரணம் தேங்காயெண்ணையில் உறையும் தன்மையுள்ள கொழுப்பு 92% இருப்பதாக சொல்லப்பட்டது தான். உறையும் தன்மையுள்ள பூரித வகை கொழுப்புகள் இரத்த குழாய்களில் படிந்து இரத்த கொழுப்புகளில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பு நோயை ஏற்ப்படுத்துகின்றன என்று நம் மனதில் ஆழ பதிந்து விட்டது.எல்லா வகையான பூரித கொழுப்புகளும் ஒரே மாதிரியான தன்மையுடையது இல்லை. இதில் மூன்று வகைப்படும்.

1.நீள வகையான கொழுப்பு அமிலங்கள் long chain fatty acid [lcfa]

2.மத்திம வகையான கொழுப்பு அமிலங்கள் medium chain fatty acid [mcfa]

3.குட்டை வகையான கொழுப்பு அமிலங்கள் short chain fatty acid [scfa]

பொதுவாக பூரித கொழுப்புகள் நீள வகையான கொழுப்பு அமிலங்கள் கொண்டவை.ஒரு கிராமுக்கு ஒன்பது கலோரிகளை கொண்டதாக இருக்கும். ஆனால் தேங்காயெண்ணையில் உள்ள மத்திம வகையான கொழுப்பில் ஒரு கிராமுக்கு ஆறு கலோரிகள் தான் உள்ளது. நீள வகையான கொழுப்பு ஜீரணமாவதர்க்கு அதிக நேரம் ஆகும். அதனால் அவை உடலில் சேமித்து வைத்து கொள்ளப்பட்டு உடலில் சேர்ந்து அழுந்த படிந்து விடுகிறது[staturated fat] இந்த வகையான கொழுப்பை கரைப்பது மிகவும் கடினம். ஆனால் தேங்காயெண்ணையில் உள்ள மத்திம வகையான கொழுப்பு அமிலங்கள் ஜீரண உறுப்புக்கு அதிகம் வேலை கொடுக்காமல் விரைவில் கல்லீரலுக்கு அனுப்பபட்டு உடனே சக்தியாக மாற்றப்பட்டு செலவழிக்கப்பட்டு விடுகிறது.மற்ற கொழுப்புகளை போல சேமிக்க படுவதில்லை. தேங்காயெண்ணை உடலுக்கு அதிக சக்தியளித்து உடல் எடையை குறைக்க வகை செய்கிறது. உடல் சக்தியை [thermogenisis]அதிகரிக்க செய்கிறது. மற்றொரு அருமயான விஷயம், தாய்ப்பாலில் மட்டுமே உள்ள lauric acid ‌தேங்காயில் அமைந்துள்ள கொழுப்பில் 50% உள்ளது. மற்ற எந்த உணவிலும் இப்படி அமைந்ததில்லை lauric acid .வைரஸ் கிருமிகளால் உண்டாகும் சளி, இருமல். அம்மை நோய், தட்டம்மை, சார்ஸ், பாக்டிரியாக்களால் தோன்றும் பால்வினை நோய்கள், டைபாய்டு, வயிற்று நோய்கள், வாந்தி, பேதி போன்ற பல நோய்களை வரவிடாமல் தடுக்கின்றன.
தேங்காயெண்ணையின் நன்மைகள்...
*உறையும் வகை கொழுப்பு வகையை சார்ந்ததாய் இருந்தால் கூட குறைந்த சக்தியிலேயே உடலுக்கு நல்ல தெம்பை அளிக்கிறது.
*தேங்காயில் உள்ள கொழுப்பை ஜீரணிப்பதர்க்கு இன்சுலின் தேவைப்படுவதில்லை.அதனால் நீரிழிவு நோயாளிகள் சிலருக்கு சாப்பிட்டபின் ரத்தத்தில் சர்க்கரை அதிகம் தோன்றுவதில்லை.இது புற்று நோய்க்கும், நீரிழிவு நோய்க்கும், எதிராக செயல்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
*உடல் இளைக்க விரும்புபவர்கள் தேங்காயெண்ணையை பயன்படுத்தினால் அது நம் உடலில் நிகழும் வளர்ச்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தி நன் உடலில் உள்ள அதிக கலோரிகளை எரித்து உடல் பருமனை குறைக்கின்றது. உடல் எடை கூடுவதர்க்கு கொழுப்பு சார்ந்த உணவுகள் தான் காரனம் என்று நாம் முடிவு செய்துவிடமுடியாது. கொழுப்பை விட உடல் எடை கூடுவதற்க்கு முக்கிய காரனமாக அமைவது தீட்டப்பட்ட மாவு பொருட்களும் மற்றும் சர்க்கரை, சர்க்கரை சார்ந்த பொருட்களுமே!
ஹைட்ரோஜினேஷன் செய்ய படாத சுத்தமான செக் எண்ணை மிகவும் நல்லது. ஹைட்ரோஜினேஷன் என்ற முறையில் எண்ணையின் வாழ் நாள் அதிகரிக்கபடுகிறது.இந்த முறையில் டிரான்ஸ் கொழுப்பு உண்டாகின்றது. இவை ரத்தத்தில் உள்ள தீமை செய்யும் கொலஸ்டிராலை அதிகரித்து [], நன்மை செய்யும் கொலஸ்டிராலை[]குறைத்து விடுகிறது.சுத்தமான செக் எண்ணையில் டிரான்ஸ் கொழுப்பு அமிலங்கள் இல்லை. மேலும் தேங்காயெண்ணை மற்ற எண்ணையை விட சூடு தாங்கும் திறன் கொண்டது. சூடு படுத்தும் பொழுது விரைவில் புகைய ஆரம்பிக்காது.450*f [230*c] வரை திடமாக சூட்டை தாங்கும். ஆலிவ் எண்ணை கூட 375*f [190*c] வரை தான் சூடு தாங்கும். அதிக சூடு படுத்தும் பொழுது டிரான்ஸ் கொழுப்பு அமிலங்கள் உண்டாகிவிடும் ஆபத்து உள்ளது. ஆனல் தேங்காய் எண்ணையில் அந்த ஆபத்து கிடயாது.

ஐதீகங்கள்


ஐதீகங்கள்
நரகாசுரவதத்தை கொண்டாடும் விதத்தில் தீபாவளியை நம்ம ஊரில் கொண்டாடுகிறோம். நடைமுறையில் உள்ள வேறு சில பல ஐதீகங்கள்.*ஐப்பசி மாத அமாவாசை அன்று தான் தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தனர். அப்போது வெளி வந்த மங்கள பொறுள்களுடன் மகா லக்ஷ்மி அவதரித்தார். ஆகவே தீபாவளி மகாலக்ஷ்மி பிறந்த நாள்.*12 ஆண்டு வனவாசத்திற்கு பிறகு பஞ்ச பாண்டவர்கள் நாடு திரும்பிய நாளை தீபமேற்றி கொண்டாடும் நாள்.*வாமனனாக அவதரித்த மகா விஷ்ணு மகாபலியின் சிறையிலிருந்து லக்ஷ்மியை மீட்ட நாள்.*விக்கிரமாதித்தன் அரசராக முடிசூட்டிய நாள்.*ராவண வதத்தை முடித்த ராமர், சீதை, லட்சுமணர், அனுமனுடன் அயோத்தி திரும்பிய நாள்.*சமண குருவான மஹாவீரர் தீர்த்தங்கரர் முக்தியடைந்த தினம்.*மஹாராஷ்ட்ராவில் தீபாவளி அன்று பெண்கள் தங்கள் கணவர், சகோதரர்களின் தீர்க்காயுளுக்காக யமனை வழிபடுகின்றனர்.*வங்காளத்தில் தீபாவளியை மஹா நிஷா என்று கொண்டாடுகிறார்கள்.அன்று 64,000 யோகினிகள் புடைசூழ காட்சி தந்தார் என்று நம்புகின்றனர்.*ராஜச்தான் மாநிலத்தில் அன்று பூனைகளுக்கு வழிபாடும் படையலும் உண்டு.அவர்கள் பூனையை லக்ஷ்மியின் அம்சமாக கருதுகிறார்கள்.*பீகாரில் தீபாவளி அன்று ஆண்கள் கூடை நிறைய நெற்கதிர்களும் புல்லும் எடுத்து கொண்டு கிராமத்தை வலம் வருகின்றனர்.*குமாவோன் மலைகளில் வீடுகளில் ரங்கோலிகள் போடபடுகின்றன.பெண்கள் அரிசி மாவு, வண்ணங்கள் கலந்து போடபடும் ரங்கோலிகளை கற்பூரமேற்றி வழிபடுகின்றனர். சந்தனத்தால் செய்ய பட்ட லட்சுமி உருவ சிலையை தாமிரத் தட்டில் வைத்து கரும்பு சாறால் அபிஷேகிக்கிறார்கள்.*மராட்டியர்கள் தீபாவளி அன்று சீட்டாடுவதை விரும்புகின்றனர். அன்று ஆட்டத்தில் தோற்பது ராசியானதாக கருத படுகிறது.*குஜராத்தியர் தீபாவளி அன்று புது கணக்கை ஆரம்பிக்கின்றனர்.*தீபாவளி அன்று உப்பு வாங்குவது அதிர்ஷ்டமாக கருதபடுகிறது.உப்பில் மகாலக்ஷ்மி வசிப்பதாக ஐதீகம்.

காசி


காசி
நதிகளில் மிகவும் புனிதமாக கங்கை நதி கருதபடுகிறது.இந்துமத சடஙகுகளில் தண்ணீரை குடிக்கும் போது கங்காதீர்த்தம் என்று கூறுவதே வழக்கம்.கங்கை நதி பல ஊர்களை கடந்து வந்தாலும் காசியை தான் மிகவும் புனிதமாக நீராடும் கட்டமாக கருதுகிறார்கள்.காசா என்ற மன்னன் இந்த பிரதேசத்தை ஆண்டதால் காசி என்று அழைக்கப்பட்டதாம். கங்கையில் 64 நீராடும் கட்டங்கள்( படித்துறைகள்) இருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை மணி கர்ணிகா கட்டம், அசிசங்கமக் கட்டம், வருண‌சங்கமக் கட்டம், பஞ்சகங்கா கட்டம், தச அசுவமேதா கட்டம் ஆகியவைதான்.ஆனால் ஆலயத்தின் சுவாமிக்கு அபிஷேகம் செய்ய விசாலாக்ஷி கட்டத்தில் நீராடி அங்கிருந்து கங்கா நீரை எடுத்து வர வேண்டும்.12 ஜோதிர்லிங்கங்களில் விசுவநாதர் முதன்மையனவர். அவருக்கு நாமே அபிஷேக ஆராதனை செய்யலாம்.காசியின் தேவியான விசாலாக்ஷி ஆலயம் விசுவநாதர் ஆலயம்பக்கத்து தெருவில் தான் இருக்கிறது.விசுவநாதர் ஆலயம் அருகில் அன்ன‌பூரணி ஆலயம் இருக்கிறது. ம‌க்க‌ளுக்கு அன்ன‌ம் அளிக்க‌ தேவி கையில் க‌ர‌ண்டியுட‌ன் த‌ரிச‌ண‌ம் த‌ருகிறார். தீபாவ‌ளி அன்று ஈசுவ‌ர‌னுக்கு அன்ன‌ம் அளிக்கும் விழா மிக‌ முக்கிய‌மான‌து. இதை மிட்டாய் திருவிழா என்று அழைப்ப‌ர். அன்று அன்ன‌பூரணி ச‌ர்வ‌ல‌ங்கார பூஷித‌யாக‌ ஆல‌ய‌த்தின் மாடியில் அம‌ர்ந்திருப்பாள்.ஒரு கையில் த‌ங்க‌ பாத்திர‌மும் ம‌று கையில் த‌ங்க‌ க‌ர‌ண்டியும் இருக்கும். அன்னையின் முன்னால் ஈசுவ‌ர‌ன் கையில் த‌ங்க‌ திருவோட்டுட‌ன் நின்றிருப்பார். அன்னையின் எதிரில் 30 பெரிய‌ த‌ட்டுக‌ளில் ப‌ல‌வித‌மான‌ இனிப்புக‌ள் வைப்பார்க‌ள். ஈசுவ‌ர‌னுக்கு அன்னை அன்ன‌மிட்ட‌ பிற‌கு இனிப்புக‌ள் வினியோகிப்பார்க‌ள்.காசியில் 1500 ஆல‌ய‌ங்க‌ள் இருக்கின்ற‌து. துர்கைக்கு த‌னி ஆல‌ய‌ம் இருக்கிற‌து. அவ‌ற்றில் விசுவநாதர், விசாலாக்ஷி, அன்ன‌பூரணி, கால‌ பைர‌வ‌ர் ஆல‌ய‌ங்க‌ள் முக்கிய‌மான‌வை.காசியில் மானிட‌ர்க‌ளோ வில‌ங்குக‌ளோ ப‌ற‌வைக‌ளோ உயிரை விடும்போது விசுவேசுவ‌ர‌ர் அத‌னை த‌ன் ம‌டியில் இருத்தி அத‌ன் செவிக‌ளில் தார‌கமந்திர‌ம்ஓதுகிறார். தார‌கமந்திரம், ஓம்காரம், மஹாவாக்கியம், ராமநாமம் என மூன்றையும் குறிக்கும். அப்போது அவ்வுயிர் இறைவனுடன் ஒன்றி விடும். முக்தி கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை

கும்பமேளா


அமுதம் சிந்திய இடங்களாக கங்கை நதியில் இரண்டு இடங்களை சொல்வர். முதலாவது, கங்கை இமயமலையில் இருந்து இறங்கி சம வெளியில் கால் பதிக்கும் இடத்தில் இருக்கும் ஹரித்துவார். கங்கை, யமுனை சரஸ்வதி சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் இருக்கும் இரண்டாவது இடம்.தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்தனர்.இடையில் இடையூறுகள் பல வந்தன. இறுதியில் அமுதம் கிடைத்தது. கிடைத்தவுடன் அதை ஒரு குடத்தில் எடுத்துக் கொண்டு தேவலோகம் பறந்தான் தேவேந்திரன் மகன் ஜெயந்தன். அமுதத்தை எதிர்பார்த்து காத்திருந்த அசுரர்கள் கோபம் கொண்டனர். அமுத குடத்தை கைப்பற்ற முயர்ச்சித்தனர்.தேவர்கள் தடுத்தனர். இருவருக்கிடயே போர் மூண்டது. ஜெயந்தன் வைத்திருந்த அமுத குடத்தை காப்பாற்ற சந்திரனும், குருவும் ஒன்று சேர்ந்து துணை நின்றனர். ஜெயந்தன் வைத்திருந்த அமுத குடத்தில் இருந்து அமுத துளிகள் சில இடங்களில் சிந்தின. அப்படி ஓரிரு துளிகள் அமுதம் சிந்திய இடங்கள் ஹரித்துவார், அலகாபாத், நாசிக், உஜ்ஜயினி. இந்த இடங்களில் நடக்கும் தீர்த்தவாரித்திருவிழா தான் கும்பமேளா.