Sunday, February 15, 2009

சகாப்தக் காதல்..........


சிகாகோவில் உள்ள ஸிட்லி ஆஸ்டின் என்னும் புகழ்பெற்ற சட்ட நிறுவனம் ஒன்றில், மிஷேல் ராபின்சன் எனும் இளம்பெண் பணிபுரிந்து வந்தார். அது 1989 ஆம் ஆண்டு ஜூன் மாதம். அந்த நிறுவனத்தின் உயர் பதவியை ஏற்க இளைஞர் ஒருவர் அங்கு வந்து சேர்ந்தார். மெலிந்த உருவம், வசீகரத் தோற்றம், உற்சாக மனது என்று இருந்த அந்த இளைஞரின் ஆலோசகராக மூன்று மாதம் பணிபுரிந்தார் மிஷேல். இருவருமே கருப்பரினத்தைச் சேர்ந்தவர்கள். அலுவலகம் மட்டுமின்றி நிறுவனம் ஏற்பாடு செய்த பொது நிகழ்ச்சிகள் பலவற்றிலும் அவருடனேயே இருக்க வேண்டிய சூழல் மிஷேலுக்கு. அப்போதுதான் நுட்பமான அறிவு கொண்ட மிஷேலுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது அவருக்கு. இந்த பெண் என்னுடைய வாழ்க்கைத் துணையாக அமைந்தால் என்ற ஆசையும் ஏற்பட்டது.

தன் மனம் கவர்ந்த மங்கையிடம் தன் காதலை வெளிப்படுத்தவும் செய்தார் அந்த இளைஞர். ஆனால் அடுத்த வினாடியே அந்த விருப்பத்தை நிராகரித்தார் மிஷேல்.

அன்று மிஷேல் என்கிற அந்த புத்திசாலிப் பெண்ணின் மனதை கவரும் வழிதெரியாமல் தவித்த அந்த நபர்தான் இன்று ஒட்டுமொத்த அமெரிக்கர்களின் மனங்களையும் கொள்ளையடித்து வரலாற்றின் ஒரு திருப்புமுனையாக அமெரிக்காவின் அதிபராக வீற்றிருக்கும் பராக் ஒபாமா.

மிஷேல் தன்னை நிராகரித்த போதிலும், மனம் தளரவில்லை ஒபாமா. தன் அபரிமிதமான அன்பை அவருக்கு தொடர்ந்து உணர்த்தியபடியேதான் இருந்தார். வேலையில் ஒபாமா காட்டுகிற ஈடுபாடு, சக மனிதர்களிடம் பழகும் தன்மை போன்றவற்றால் அவர் மீது ஏற்கனவே மிஷேலுக்கு இருந்த மரியாதை காதல் என்ற புதுவடிவம் எடுத்தது. ஒருநாள் தன்னுடன் வெளியே வரும்படி ஒபாமா அழைக்க உற்சாகமாக சம்மதித்தார் மிஷெல். அந்த முன்னிரவில் சின்ன புன்னகையுடன் மெல்லிய தலையசைப்புடன் ஒபாமாவிடம் தன் காதலைச் சொன்னார். வானமே வசப்பட்டது போல் பெருமிதம் கொண்டார் ஒபாமா.

அரசியல், சட்டம் உள்ளிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்ற ஒபாமா, படிக்கிற காலம் துவங்கி எளிய வர்க்கத்தினரது சமுதாய பொருளாதார முன்னேற்றத்துக்காக போராடியவர். மக்களுக்கு ஏதேனும் நன்மை செய்யவேண்டுமெனில், அரசியல்தான் சரியான களம் என்ற எண்ணம் கொண்டவர். மிஷெலின் காதலும், தோழமையும், அண்மையும் அவரை இன்னும் இன்னும் ஊக்கப்படுத்தின. சாதனைகள் பல புரியும் தன்மைகள் தமக்கு உண்டு என்ற நம்பிக்கை ஒளி பாய்ந்தது அவருக்குள்ளே.

ஹார்வர்டு லா ரெவியூ என்ற சட்டப் பதிப்பு நிறுவனத்தின் முதல் கருப்பினத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஒபாமா. மதிப்பு மிக்க இப்பதவியை அடுத்து சிகாகோ பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை கெளரவங்கள் மொத்தமும் அவரது க்ரீடத்திற்கு இறகுகளாயின.
நாடி வந்த கெளரவங்களும் தேடி வந்த பதவிகளும் ஒபாமாவின் அரசியல் வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போட்டன. 1990 ஆம் ஆண்டு அரசியலில் நிதானமாக அடியெடுத்து வைத்த ஒபாமா, அடுத்தடுத்து படுவேகமாக முன்னேறினார். ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரானவர், 1996-இல் இல்லினாய்ஸ் மாகாணத்தின் சட்டசபைக்கு தேர்வானார்.

இதற்கிடையே 1992 ஆம் ஆண்டு மூன்று ஆண்டு காதல் வாழ்க்கைக்குப் பிறகு அக்டோபர் 3 ஆம் தேதி, திருமண பந்தத்தில் இணைந்தனர் ஒபாமாவும் மிஷெலும். அன்பின் பரிசாக இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.
நிறைவான குடும்ப வாழ்க்கை என்ற பெரும் பலம் பின்னணியில் இருக்க, ஒபாமாவின் அரசியல் வாழ்க்கை ஒளிவீசத் துவங்கியது. அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. 2004 தேர்தலில் வென்று அமெரிக்க மேல்சபை உறுப்பினராகப் பதவியேற்றார். மக்களை மனதில் கொண்டு சீர்திருத்த நலச்சட்டங்கள் பலவற்றையும் அமல்படுத்தக் காரணமாக இருந்தார். 2007 பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். ஆனால் மிஷெலுக்கு அரசியல் ஆர்வம் துளியும் இல்லை. பிரச்சாரத்தில் சற்று சோர்வாகவே இருந்த மிஷெல் திடீரென்றுதான் விஸ்வரூபம் எடுத்தார். ஊர் ஊராகச் சென்று ஆயிரக்கணக்கான மக்களைச் சந்தித்து தீவிர பிரச்சாரம் செய்தார்.

அரசியலில் விருப்பமில்லாத நீங்கள் திடீரென்ற அரசியல் ஆர்வம் காட்டுகிறீர்களே ஏன் என்ற கேள்விக்கு, சிரித்தபடி மிஷெல் அளித்த பதில் என்ன தெரியுமா?
""தேர்தலில் என் ஆதரவு வேண்டுமெனில் சிகரெட் புகைப்பதை உடனே நிறுத்துங்கள் என்று அவரிடம் நிபந்தனை விதித்தேன். அவரும் உடனே புகைப்பதை நிறுத்தினார். நான் களமிறங்கிவிட்டேன் என்பதுதான்.""

அந்த அளவுக்கு மனைவி மேல் காதல் கொண்டவர் ஒபாமா. அந்த நேசத்தில் நெக்குருகிப் போன மிஷெல் வெறி கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 2008 நவம்பர் 4 ஆம் தேதி தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து பெரும் வெற்றி பெற்றார் ஒபாமா. இந்த சரித்திர வெற்றிக்குப் பின்னே ஒய்யாரமாக வீற்றிருந்தது அந்த சகாப்த காதல். 2009 ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் சர்வ வல்லமை படைத்த 44 வது அதிபராகப் பதவியேற்று, சரித்திரத்தில் தன்னைப் பதிவு செய்து கொண்டார் ஒபாமா. அமெரிக்காவின் முதல் பெண்மணியாக சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெள்ளை மாளிகையில் அடியெடுத்து வைத்துள்ளார் மிஷெல் ஒபாமா.

5 comments:

Gokul said...

He is great orator.Good 2 know abt him.

malar said...

படிக்க ரொம்ப சுவாரஸ்சியமாக இருந்தது .

நாச்சிகுளம் TNTJ (கிளை) said...

ஒரு ஆண் வெற்றிக்கு பின் பெண் என்பது தான் உண்மை

Sheik babu said...

very nice love story between obama and Mishel.

Thank u

Srirankathu Angel,

by
Sheik, from Chennai.

Jaleela said...

//ஒரு ஆண் வெற்றிக்கு பின் பெண் என்பது தான் உண்மை////அருமையான‌ த‌க‌வ‌ல்