
வணக்கங்க!! நான் பப்பி பேசறேன். தேன் நிறத்தில புசு புசுனு அழகா இருப்பேன். காதுகள் லேசா கருப்பா இருக்கும். வால் மட்டும் கொஞ்சம் நீளமா இருக்கும். நீங்களெல்லாம் உங்க அனுபவங்கள சொல்லும்போது நான் மட்டும் சொல்லக் கூடாதா? அதான் என்னோட வாழ்க்கையில் நடந்த சில, சுவாரஸ்யமான விஷயங்கள உங்களோட பகிர்ந்துக்க போறேன். நான் பொறந்த உடனே எங்கம்மா என்ன விட்டுட்டு எங்கேயோ போய்ட்டாங்க. பச்சை கொழந்தையா இருந்த என்ன, மெர்ஸி ஆன்டிதான் தூக்கி வளத்தாங்க. அவங்க பேருக்கு ஏத்த மாதிரி கருணையோட இருப்பாங்க. தினமும் எனக்கு முட்டை தருவாங்க. ஞாயிறு ஆனா மீன், ஆடு, கோழினு ஜமாய்ச்சுடுவாங்க. நான் அங்கே ராணி மாதிரி இருந்தேன். விக்டர் அங்கிள்.....அதாங்க மெர்ஸி ஆன்டியோட வீட்டுக்காரரு....ரொம்ப நல்லவரு. காலைல அவருக்கு பேப்பர் வாசல்லேந்து எடுத்துட்டு வந்து குடுப்பேன். அவர் எனக்கு பிஸ்கெட் போடுவாரு. அப்பறம் ஆன்டி மார்க்கெட் போனா துரத்திகிட்டே கூட போய்டுவேன். எனக்கு நிறைய சாப்பிட வாங்கி தருவாங்க. ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்க. அப்படி தாயா பிள்ளையா பழகின நாங்க பிரியற சந்தர்ப்பம் வந்துது. ஆன்டி ரொம்ப தவிச்சு போய்ட்டாங்க. விக்டர் அங்கிள் கூட கலங்கிட்டாரு. விக்டர் அங்கிளுக்கு ட்ரான்ஸ்பர் கிடைச்சு மும்பை போய்ட்டாங்க. ஆனா என்ன அனாதையா தெருவுல விடாம ராமு ஆசைப்பட்டான்னு என்ன அவங்கிட்ட குடுத்தாங்க. ராமுவோட அப்ப கிட்டு மாமா ரொம்ப கண்டிப்பானவர். கிட்டு மாமா அம்புஜ மாமி ரொம்ப அன்பானவங்க. ராமு எப்ப பாத்தாலும் எங்கூட விளையாடுவான். ஆனா மெர்ஸி ஆன்டி வீட்டுல கிடைக்காத சந்தோஷம் இங்க கிடைக்காட்டியும் ஓரளவுக்கு நிம்மதி இருந்திச்சு. வெறும் பால், தயிர் சாதம்தான். கொஞ்சம் இளச்சுட்டேன். ஆனாலும் பரவால்ல., தயிர் சாதமும் சூப்பரா இருந்திச்சு. ஒரு நாள் கிட்டு மாமா எங்கயோ அவசரமா போய்ட்டு இருந்தாரு. நான் குறுக்கே ஓடி வந்துட்டேன். அவ்வளவுதான் மாமா ருத்ர தாண்டவம் ஆடிட்டார். இந்த சனியன எங்கருந்து கொண்டு வந்தீங்க?? இத மொதல்ல ஒழிச்சு கட்டணும்னு கத்தினார். எத்தனையோ முறை நான் வெளில போகும்போது அவர் குறுக்க வந்திருக்கார். நான் இப்படி கத்தினேனா?? அபசகுனம்னு சொன்னேனா? ஆனா என்ன விட மாமிதான் ரொம்ப வாடி போய்ட்டா. கிட்டு மாமா என்ன விடவே இல்ல....அடிச்சு துரத்திட்டா. ரெண்டு நாள் அலஞ்சேன். அப்பறம் ஒரு குப்பத்துக்குள்ள போனேன். அங்க முனியம்மா வீட்டுகிட்ட போய் நின்னேன். சாப்பிட்டுகிட்டே இருந்தாங்க. என்ன பாத்ததும் எனக்கும் கொஞ்சம் போட்டாங்க. நான் வாலை ஆட்டிகிட்டே நின்னேன். அங்கேயே தங்கிட்டேன். காலம் அப்படியே போச்சு. முனியம்மாவுக்கு ரெண்டு பசங்க. அவங்கள நல்லா படிக்க வெக்கணும்னு முனியம்மாவுக்கு ஆசை. ஆனா அவ புருஷன் தண்ணியடிச்சே எல்லாத்தையும் அழிச்சான். தினம் அடி உதை சித்ரவதைதான். ஏதாவது உதாரணம் சொல்லணும்னா நாய் பொழப்புனு சொல்லுவாங்க. ஆனா இந்த மாதிரி சில மனிஷங்க பொழப்புக்கு நாய் பொழப்பு எவ்வளவோ தேவலாம். ஒரு நாள் நான் அஞ்சு குட்டிங்கள பெத்தேன். எல்லாம் பக்கத்து தெரு கருப்பு நாயோட ஏற்பட்ட லவ்ஸ் தான். குட்டிங்க எல்லாம் அவ்வளவு அழகு....என்ன மாதிரியே!! அழக பாத்து எல்லாரும் விலைக்கு கேட்டாங்க. பாவம் முனியம்மாவும் தயங்கிகிட்டே விலைக்கு குடுத்துட்டா. எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு. நாயானாலும், பேயானாலும் தாய் தாய்தானே!! இரண்டு மூணு நாள் சரியா சாப்பிடல. சரி முனியம்மாவோட குழந்தைங்க படிப்பு செலவுக்கு ஆகுமேன்னு மனச தேத்திகிட்டேன். ஒரு நாள் முனியம்ம புருஷன் முனியம்மாவோட சண்டை போட்டுகிட்டு இருந்தப்போ, நான் போய் பயங்கரமா குரைச்சேன். அவனுக்கு வந்ததே ஆத்திரம்!! என்னை வீட்ட விட்டே துரத்தி விட்டுட்டான். எனக்கு இப்ப யாருமே இல்லை. யாராவது என்ன உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போவீங்களா? என்னோட அடையாளம் தெரியுமில்லையா? தேன் நிறத்துல அழகா புசு புசுன்னு இருப்பேன். காதுகள் கொஞ்சம் லேசா கருப்பா இருக்கும். வால் மட்டும் கொஞ்சம் நீளமா இருக்கும். பப்பினா வாலாட்டுவேன்.
1 comment:
@ PAPPI:
pappi.. inga vaa naan unna blue cross la vittuduren.. :).. [bcoz of my work schedule i mayn't take care of you..]..
@ writter:
writing style is amazing... "நாயானாலும், பேயானாலும் தாய் தாய்தானே!! " - though its funny its a msg.
Post a Comment