Thursday, November 27, 2008

கல்லுக்குள் ஈரம்


1945 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், 29 ஆம் தேதி அதிகாலைஇவா ப்ரெளன் என்னும் பெயர் கொண்ட அந்த அழகிய பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம் அந்த அதிகாலை. ஏறக்குறைய 16 ஆண்டுகளாக அவள் அந்த தங்கத் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். ஆம்!! 16 ஆண்டுகளாக அவள் உயிருக்கு உயிராக காதலித்துக் கொண்டிருந்த அவளுடைய காதலன் அவளை அந்த தருணத்தில் மணம் புரிந்து கொள்ளப் போவதாக வாக்களித்திருந்தான். ஜெர்மெனியின் தலைநகரான பெர்லினில் ஒரு மாபெரும் மாளிகயில் ரகசியத் திருமணம் என்று முடிவாகியிருந்தது. அதிகாலைப் பொழுதில் திருமணத்தை நடத்தி வைக்க பாதிரியார் ஒருவர் ரகசியமாக மாளிகைக்கு அழைத்து வரப்பட்டார். இவா ப்ரெளன் மணப்பெண்ணுக்கு உரிய பளபளப்பான கரிய நிற ஆடையை மகிழ்வுடன் அணிந்து கொண்டாள். மணமகனும் அலங்கரித்துக் கொண்டான். இருவரையும் பாதிரியார் அருகருகே நிற்க வைத்து திருமணத்திற்கு ஒப்புதல் கேட்டார். இவா ப்ரெளன் உதிர்த்த சம்மதம் என்ற ஒற்றை வார்த்தையில் ஆயிரம் சம்மதங்கள் இணைந்திருந்தன. அவளுடைய காதலனும் ஒப்புதல் அளித்தான். பாதிரியார் மண மக்களிடம் மோதிரம் மாற்றிக் கொள்ள சொன்னார். இவா ப்ரெளன் மிகவும் நெகிழ்ந்திருந்த தருணம் அது. கண்களில் கரை கட்டியிருந்த கண்ணீரை வெளிப்படுத்தாமல், காதலனின் விரலில் மோதிரத்தை மாட்டினாள். அவள் காதலனும் அவளுடைய விரலில் மோதிரத்தை மாட்டினான். பாதிரியார் இருவரையும் முத்தமிட்டுக் கொள்ளச் சொன்னார். இவா ப்ரெளன் இத்தனை நாள் தனது இதயத்தில் தேக்கி வைத்திருந்த காதலை எல்லாம் திரட்டி தனது ஈர இதழ்களினூடே தனது உயிரையே காதலனின் உடலில் செலுத்தி விடும் ஆவேசத்துடன் முத்தமிட்டாள். அந்தத் திருமணம், வெகு ரகசியமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மணமகனுக்கு மிகவும் நெருக்கமான இரு நண்பர்கள் மட்டும் அங்கே கூடியிருந்தனர். சோகம் கப்பிய முகத்துடன், காட்சியளித்த அவர்கள், சோகையாகக் கை தட்டினார்கள். அதற்கு அடுத்த நாள், திருமணம் நடந்தேறிய 30-ஏ மணி நேரத்தில் அந்தப் புது மணமகனும்ம் மணப்பெண்ணும், கொடிய சயனைடு விஷமருந்தி அதே மாளிகையில் தற்கொலை செய்து கொண்டு மடிந்தனர். தற்கொலையில், தனது மகத்தான வாழ்க்கையை முடித்துக் கொண்ட அந்த மணமகன், "அடால்ப் ஹிட்லர்". உலகின் மிகப்பெரும் சாபக்கேடு என வர்ணிக்கப்பட்ட, ஜெர்மானியக் கொடுங்கோலன், 1930 மற்றும் 40 களில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றை நசுக்கி அப்பாவி மக்களை, லட்சக் கணக்கில் சித்ரவதைக்கு உள்ளாக்கிக் கொன்றவன். அவன் வாழ்விலும் ஒரு காதல். அந்த உன்மத்தனை, சர்வாதிகாரியை, உலகின் மிகக் கொடூரமான கொலை காரனை அவ்வளவு ஆழமாக நேசிக்கவும் ஒருத்தி இருந்தாள்.

கான்வெண்ட் படிப்பை முடித்து, பள்ளியிலிருந்து அப்போது தான் வெளியே வந்திருந்தாள் இவா ப்ரெளன். இளமை அவளை உலக அழகியாக ஊருக்குக் காட்டியது. அவளிடம் தங்களது காதலைச் சொல்லி ஏமாந்து போனவர்கள் ஏராளம். யாரையும் அவள் ஏறிட்டுக் கூடப் பார்க்கவில்லை. தன்னுடைய பதினேழாவது வயதில், ஹிட்லரின் அந்தரங்கப் புகைப்படக் கலைஞர், ஹாப்மேன் என்பவனின் உதவியாளராக அவள் பணியாற்றாத் துவங்கினாள். அதுவரை ஹிட்லர் என்ற பெயரைக் கேள்விப் பட்டிருந்தாளேயொழிய ஒருநாளும் அவனைப் பார்த்ததில்லை. ஒருநாள், அவளை விட 23 வயது மூத்தவரான ஹிட்லருடன், எதிர்பாராத சந்திப்பு நிகழ்ந்தது. அந்த சந்திப்பில்தான் இவா ப்ரெளனின் வாழ்க்கை தடம் புரண்டது. வாழ்க்கை என்று எனக்கு, ஒன்று இனி இருந்தால் அது ஹிட்லருடன் தான் என்று அந்த முதல் சந்திப்பிலேயே அவள் முடிவு செய்தாள். அந்தக் காதலுக்கு நிச்சயம் உடல் கவர்ச்சி ஒரு காரணம் அல்ல. பின் அந்தத் தருணத்தில், அவளது உள்ளத்தில் ஹிட்லர் மேல் அவ்வளவு ஆவேசமான காதல் அரும்பியது எதனால்? இவா ப்ரெளனுக்கே அந்தக் கேள்விக்கான விடை தெரியவில்லை. அதன் பிறகு இவ்வுலகில் இருந்த அடுத்த 16 ஆண்டுகளும், அந்தப் பேதைப் பெண் வாழ்ந்தது ஹிட்லருக்காக மட்டுமே. அவள் மடிந்ததும் அவனுக்காகத்தான். பெற்றோர்களின் எதிர்ப்பு, சமுதாயத்தின் நிராகரிப்பு, எதனாலும் அவளை மாற்ற இயலவில்லை. ஜெர்மானிய அரசியலில், வேகமாக வளர்ந்து கொண்டிருந்த ஹிட்லர் மக்களிடம் தன் செல்வக்கை நிலைநாட்டிக் கொள்ள அவளுடனான உறவை வெளிப்படுத்தாமல் ரகசியமாகவே வைத்திருந்தான். இவா ப்ரெளனுக்கு அது கொச்சையாகத் தெரியவில்லை. ஜெர்மானிய அதிபரின், பட்ட மகிஷி என்ற கெளரவமும், ஹிட்லருடன் பகிரங்கமாக பவனி வரும் அதிர்ஷ்டமும் அவளுக்கு இல்லை. மனித உருவில் வலம் வரும் ஆட்கொல்லி மிருகம் என்று உலகமே அவள் காதலனைத் தூற்றியதையும் அவள் பொருட்படுத்தவில்லை. ஹிட்லர் பல நேரங்களில், இவா ப்ரெளனைத் தன்னை விட எல்லா வகையிலும், தாழ்ந்த பிறவியாகக் கருதினான். அவள் மீது சாதாரணப் பரிவு காட்டுபவனாகக் கூட நடந்து கொண்டதில்லை. இருப்பினும் இவாவின் காதலும், விஸ்வாசமும் எள்ளளவும் குறையவில்லை. கொலை முயற்சி ஒன்றிலிருந்து, ஹிட்லர் தப்பித்த போது அவள் அவனிடம் சொன்னாள்........" அன்பே!! நான் வாழ்வது உன் மீதுள்ள காதலினால் மட்டும்தான். என் வாழ்வும், நீ மூச்சை நிறுத்தும் வரைதான்". ஹிட்லரின் இதயத்தை நனைய வைத்தது இந்த ஈர வார்த்தைகள்தான். அவனது இரும்பு இதயத்தை அடர்த்தி குறையாத பாதரஸமாக உருக்கியதும், இதே ஈர வார்த்தைகள்தான். 1945- இல் உலகை உலுக்கிய உலக மகா யுத்தம் முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. மனித குலத்தையே அச்சுறுத்திக் கொண்டிருந்த ஹிட்லரின் ஜெர்மானியப் படை போரில் பெரும் தோல்வியை சந்தித்துக் கொண்டிருந்தது. ரஷ்யப் படைகள், ஜெர்மெனி நாட்டின் பல பகுதிகளைக் கைப்பற்றி, தலைநகர் பெர்லினை சுற்றி வளைத்துக் கொண்டன. ஹிட்லரை எப்படியாவது உயிருடன் பிடித்து விட வேண்டும் என்பதுதான் அந்தச் செம்படையின் ஒரே நோக்கம். எஞ்சியிருந்த ஹிட்லரின் தோழர்கள் தப்பித்து ஓடிக் கொண்டிருந்தனர். மரணம் தன் கைகளை அகல விரித்துக் காத்திருந்த அந்த நேரத்தில் ஹிட்லர் இவா ப்ரெளனிடம், தன்னை விட்டு விலகச் சொன்னான். இவா ப்ரெளன் சம்மதிக்கவில்லை. ஹிட்லரின் இதயம் இன்னும் இளகியது. இவா ப்ரெளனிடம் தனது காதலைத் தெரிவித்தான். மணந்து கொள்ள சம்மதித்தான். ஹிட்லர் மாளிகையும், பாதாள நிலவறையில், இரண்டே இரண்டு பேர் சாட்சியாக இருக்க, இவா ப்ரெளன் அடால்ப் ஹிட்லரைக் கைப்பிடித்தாள்.

பளபளக்கும் கருப்பு நிற ஆடையில், வெட்கத்திலும், முகம் நிறைந்த புன்னகையிலும், ஜொலித்த அந்தப் புதுமணப் பெண், திருமணச் சான்றிதழில், இவா ஹிட்லர் என்று மிகப் பெருமிதத்துடன் கையெழுத்திட்டாள். தன் உயிர்க் காதலனுடன், ஒருநாள், ஒரே ஒருநாள், திருமண வாழ்க்கை நடத்திய நிறைவுடன், அடுத்த நாள் பகலில் ஹிட்லருடன் சேர்ந்து விஷமருந்தி, உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். அப்போது அவளுக்கு வயது 33. யாருக்காக வாழ்ந்தாளோ, அவனுக்காகவே அவனுடனேயே, அவள் வாழ்க்கையும் முடிந்தது.

ஆனால் ஹிட்லரின் மரணம் பற்றி பல்வேறு யூகங்கள் நிலவுகின்றன.
ரஷ்யப் படைகள் பெர்லினைக் கைப்பற்றி அவரது பதுங்குமிடத்தை நெருங்கியவுடன், தற்கொலை முயற்சியாக, முதலில் விஷத்தை தனது நாய்க்கும், இவா ப்ரெளனுக்கும் பிறகு தானும் உட்கொண்டிருக்கிறார். ஆனால் இவாவும், நாயும் விஷத்தால் இறந்து விட ஹிட்லர் மட்டும் இறக்கவில்லை. எனவே, துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இறந்ததாகவும் கூறப்படுகிறது............................

எது எப்படியோ.......கொடியவன் ஒருவனிடம், இதயத்தைப் பறி கொடுத்து அவனுக்காகவே வாழ்ந்து மடிந்த, ஒரு சாதாரணப் பெண்ணின் கதை மட்டும்தானா இது?? அல்லது காவியக் காதலின் இலக்கணம் இதுவென வகுத்து தந்து சென்ற தேவதை ஒன்றின் வாழும் சரித்திரமா?........

1 comment:

kargil Jay said...

Hitler is a good human being. The French, Italians were cheating germany. germany had to pay millions for damages that was not their part. It was a mass cheating by all countries around.

He was a vegetarian, non-smoker, non-drinker, a honest person who did what he promised, he was the only ruler to do what he promised to. (1) 100% employment (2) worlds highest economic growth (3) Roads all over the country (4) Cars for normal people (non-millionaires) (5) Food to invalids (6) Revenge war.

The item (6) he promised was the evil and by then Jews were non-cooperative and took advantage of growing economy. Christian fundementalists added fuel to fire on him. His grudge on Jews turned out to be fury after preachings.

Probably my comment may irritate you, but truth is more important than acquiring your friendship.