Thursday, November 27, 2008

கவர்ச்சி கன்னி கிளியோபாட்ரா


எகிப்திய சாம்ராஜ்யத்தின், தலைநகர் அலெக்ஸான்ட்ரியாவில், ரோமானியப் படைகள் சூழ்ந்து கொண்டிருந்தன. ரோமானியர்களின் ஒரே நோக்கம், முப்பத்து ஒன்பதே வயதான எழிலரசி, எகிப்திய பேரரசி க்ளியோபாட்ராவை உயிருடன் பிடிப்பதுதான். அவளை சங்கிலிகளால் பிணைத்து, ரோமாபுரி வீதிகளில் இழுத்துச் சென்று, ரோமானியர்களே பாருங்கள்!! பேரழகி க்ளியோபாட்ரா இனி நம் அடிமை!! நமக்கு தொண்டு செய்து வாழ்வதுதான் அவளது ஒரே கடமை என்று மக்களிடம் அவளைக் காட்சிப் பொருளாக்கிக் காட்ட அவர்கள் துடித்துக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில், அத்தனையையும் இழந்து விட்டிருந்தாள் க்ளியோபாட்ரா, இருந்தும், தன் காதலுக்காகவும், காதலனுக்காகவும் மட்டுமே வாழ்வது என்று தீர்மானித்திருந்தாள். விதியின் எண்ணம் வேறாக இருந்தது. அவளுடைய காதலன் அவள் கண் முன்னே உயிரிழந்தான். இனி வாழ்வில் ஒன்றுமே இல்லை என்ற நிலை; எனவே, எஞ்சியிருந்த மானத்துடன், அவளும் உயிர் துறக்கத் தீர்மானித்தாள். தனக்கான கல்லறையை அமைத்து அதில் நுழைய இருந்த தருணத்தில் அவளை சிறை பிடித்தனர் ரோமானியர்கள். ரோமாபுரிக்கு செல்லும் முன் தற்கொலை செய்து கொண்டு விட்டால் என்ன ஆவது என்று அவளை கண்காணித்தபடி இருந்தனர். அடுத்த நாள் காலை, க்ளியோபாட்ராவுக்கு உணவுப் பொருட்கள் வந்து சேர்ந்தன. அவற்றில் பழக்கூடை ஒன்றும் இருந்தது. ஒவ்வொன்றையும் எச்சரிக்கையுடன் சோதித்து விட்டுதான் காவலர்கள் அனுமதித்தார்கள். அதே நேரம், அருகிலேயே முகாமிட்டிருந்த ரோமானிய அரசன், அக்டேவியனுக்கு செய்தி ஒன்று வந்து சேர்ந்தது. அரசன் அதனைப் படித்தான்; " எனது காதல் நாயகன், ஆன்டனியின் கல்லறையிலேயே, என்னையும் அடக்கம் செய்து விடு" : க்ளியோபாட்ரா....... பதறிப் போனான் மன்னன். க்ளியோபாட்ரா தற்கொலை செய்து கொள்ள முயல்கிறாள் என்று புரிந்து அவள் இருந்த இடத்திற்கு ஓடோடி வந்தான். ஆனால், தங்கக் கட்டிலில், சயனக் கோலத்தில், ஒயிலாகக் காட்சி தந்த அவளது, உயிரற்ற உடலைத்தான் அவனால் பார்க்க முடிந்தது. காலருகே, அந்தரங்கப் பணிப்பெண் ஒருத்தியின் உடல் கிடந்தது. உயிர் துறந்த, அரசியின் தலைக் கிரீடத்தை, சரியாகப் பொருத்திக் கொண்டிருந்த இன்னொரு பணிப் பெண்ணும், அவன் எதிரிலேயே சுருண்டு விழுந்து மாண்டாள். பழக் கூடைக்குள், சாமர்த்தியமாகக் கொண்டு வரப்பட்ட, விஷ நாகத்தின் பற்குறிகள் க்ளியோபாட்ராவின் கையில் தெரிந்தன. அது மரணத்தின் காரணத்தைப் பறைசாற்றியது. எகிப்திய சாம்ராஜ்யத்தின் கடைசி அரசி, தனது இறுதி விருப்பத்தின்படி, தன் காதலனுக்கு அருகிலேயே மீளாத் துயில் கொண்டாள். இவ்வாறு முடிந்த, புகழ் பெற்ற் அந்த துயர நாடகம் துவங்கியது கி.மு. 69 ஆம் ஆண்டில்.

எகிப்து அரசன், பன்னிரெண்டாம் டாலமியின் மகளாகப் பிறந்தாள் க்ளியோபாட்ரா. கி.மு. 51 இல் தந்தையின் மறைவுக்குப் பின் இளைய சகோதரன், பதிமூன்றாம், டாலமியுடன் இணைந்து எகிப்திய சாம்ப்ராஜ்யத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றாள். அப்பொழுது அவள் வெறும் 18 வயது பாவை. தேன் போன்ற மென்குரல், பார்ப்பவரையே கிறங்கடிக்கும் கவர்ச்சி, இவற்றுடன் அந்த வயதிலேயே, ஒன்பது மொழிகளைப் பேசும் திறமை, பேரறிவு, அரசியல் சாணக்யம், எதையும் எதிர்கொள்ளும் துணிவு ஆகியவற்றால் தேர்ந்த அரசியாக விளங்கினாள். ஆனால் அவளது வளர்ச்சி அநேகம் பேருக்கு பொறாமையை அளித்தது. அவள் சகோதரனுடைய ஆலோசகர்களின் சூழ்ச்சியால், க்ளியோபாட்ரா ஆட்சியை இழந்தாள். அண்டை நாட்டில் தஞ்சமடைந்தாள். அப்போதுதான் அப்பெரும் திருப்பம் நிகழ்ந்தது. ரோமானிய மாவீரன் ஜூலியஸ் சீஸர் அப்போது, எகிப்த்துக்கு வர நேர்ந்தது. அவனது ஆதரவுடன், ஆட்சியை மீண்டும் கைப்பற்ற முடியும் என எண்ணிய க்ளியோபாட்ரா, அவனை சந்திக்க முடிவு செய்தாள். பகிரங்கமாக, எகிப்துக்குள் நுழைந்தால் எதிரிகளால் அவளது உயிருக்கே ஆபத்து; பிறகு சீஸரை சந்திப்பது எப்படி?? ஜூலியஸ் சீஸருக்கு அளிக்கப்பட்ட பல பரிசுப் பொருட்களில், சுருட்டப்பட்டிருந்த, ஒரு அழகிய கம்பளமும் இருந்தது. அவனுக்கு எதிரில் மெதுவாக உருட்டி விரிக்கப்பட்ட, அந்த கம்பளத்திலிருந்து பளீரென வெளிப்பட்டாள் கவர்ச்சிக் கன்னி க்ளியோபாட்ரா. கண்டதும் அவள் மேல் காதல் வசப்பட்டான் மாவீரன். தன் காதலுக்காகவும், காதலிக்காகவும் எதையும் செய்யத் தயாராக இருந்த அவன், தனது படை பலத்தால் எகிப்தை வென்றான். அதை காதலின் காணிக்கையாக அவள் காலடியில் சமர்ப்பித்தான். காதல் மயக்கத்தில் பறந்தது காலம். ரோமானிய வீரனும் எகிப்த்திய அரசியும், அழகிய நைல் நதியில் கவிதைகள் பாடி, தோணிகள் ஓட்டி மகிழ்ந்தனர். காதலின் பரிசாக ஒரு மகனையும் அவனுக்கு ஈன்றெடுத்தாள் க்ளியோபாட்ரா.... மகனுடன் ரோமாபுரியில் கால் பதித்த க்ளியோபாட்ராவை, ஒரு தேவைதையாக வரவேற்றான் சீஸர். ஊர்வலமாக அழைத்துச் சென்று மக்களுக்கு அறிமுகப் படுத்தினான். அவளது சிலையையும் நிறுவி அவளை கௌரவித்தான். ஆனால் சீஸரின் அதிகாரத்தையும், க்ளியோபாட்ராவை ரோமாபுரி மஹாராணியாக அமர்த்தியதையும், பொறுக்காத சதிகாரர்கள், கி.மு.44 இல் சீஸரை வஞ்சித்துக் கொன்றனர். துடித்துப் போன க்ளியோபாட்ரா குழந்தையுடன் தன் நாட்டிற்கு தப்பி வந்து சேர்ந்தாள்.

அரசியல் மாற்றங்கள் பல அரங்கேறின......... ரோமானிய சாம்ராஜ்யத்தில், அக்டேவியன் என்பவனும், மார்க் ஆன்டனி என்பவனும், ரோமாபுரியின் வெவ்வேறு பகுதிகளை ஆளத் தொடங்கினர். கி.மு. 42 இல் அரசியல் காரணங்களுக்காக, எகிப்த்துக்கு வந்த மார்க் ஆன்டனி க்ளியோபாட்ராவை சந்தித்தான். அவள் மீது மீளாக் காதல் கொண்டான். தன் காதலை அவளிடம் சேர்ப்பிக்கத் தவித்தான். தன் கணவனை இழந்த துக்கத்தில், உயிர் சுமந்த உடலாக இருந்த க்ளியோபாட்ராவிற்கு, அவனுடைய அறிமுகம் ரணமாற்றும் மருந்தாக இருந்தது. வார்த்தைகள் வளர்ந்து, நட்பானது. நட்பின் கரிசனம் அன்பு சேர்த்தது. அன்பு முதிர்ந்து காதலானது. வாழ்வில் மீண்டும் வசந்தம் துளிர்த்தது. இருவரும் இணைந்து தனித்ததோர் உலகம் படைத்தனர். காதல் கீதம் பாடி சிறகடித்துப் பறந்தனர். ரோமானிய மன்னன் ஆன்டனியின் உலகமே தலைகீழாக மாறிப் போனது. எகிப்தே அவனது தேசமானது. க்ளியோபாட்ராவே அவனது உலகமானாள். ஆன்டனி ரோமாபுரியை மறந்தாலும், அந்நாடும், அவன் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்த பல சக்திகளும், அவனுக்கு எதிராகக் கிளம்பத் தொடங்கின. தாய் நாட்டைத் துறந்து, வேற்று நாட்டு அரசியுடன் கூடிக் குலாவிய ஆன்டனிக்கு எதிராக, மக்களைத் தூண்டி விடுவது அக்டேவியனுக்கு ஒன்றும் பெரிய காரியமாக இல்லை. ரோமானியர்கள் எகிப்து மீது போர் தொடுத்தார்கள். ஆன்டனி, க்ளியோபாட்ராவின் கடற்படைக்கு தலைமை தாங்கி, ரோமானிய கடற்படையை எதிர்த்து சென்றான். கடல் போர் துவங்கியது. ஆன்டனி வீராவேசமாகத் தான் போரிட்டான். ஆயினும், மாபெரும் ரோமானியக் கடற்படைக்கு எதிராக அவனது கரம் தாழ்ந்தது. அவனது படை தோல்வியை நோக்கி முன்னேறியது. அந்த கெட்ட செய்தி எகிப்தை அடைந்தது. தோல்வி நெருங்குவதை உணர்ந்த க்ளியோபாட்ரா தனக்காகவும், காதல் நாயகனுக்காகவும் கல்லறை ஒன்றை அமைத்தாள். அதில் குடி புகுந்தாள். அங்கே கடலில் அடுத்தடுத்து தோல்விகளால், மனம் வெதும்பி கிடந்தான் ஆன்டனி. அந்த தருணத்தில் க்ளியோபாட்ரா மரணமடைந்து விட்டாள் என்ற தவறான செய்தி அவனை சென்றடைந்தது. ஐயோ!! நான் உயிர் வாழ இருந்த ஒரே காரணமும் முடிந்தது., அன்பே இதோ நானும் வந்தேன் உன்னுடன்!! என்று கதறிய ஆன்டனி தன் வாளை வயிற்றில் பாய்ச்சிக் கொண்டு மயங்கி விழுந்தான். அரசியின் உதவியாளர்கள் அவனை எடுத்துக் கொண்டு போய், க்ளியோபாட்ராவிடம் சேர்த்தனர். மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்த காதலனைப் பார்த்துக் கதறினாள் அவள். குற்றுயிராய் இருந்த அவன், கலங்காதே!! நம் காதலை நினைவு கொள்!! நம் காதல் வாழும் என்று கூறி அவளது கரங்களில் உயிர் துறந்தான். நேர்ந்த பேரிழப்புக்கு துக்கப் படக் கூடத் திராணி இல்லை அவளிடம். சூழ்ந்து கொண்ட எதிரிகளிடம், தனது காதலனை நல்லடக்கம் செய்ய அனுமதி கோரி பெற்றாள். ஓர் அரசனுக்குரிய அனைத்து மரியாதைகளுடனும், தன் அன்புக் காதலனை கல்லறையில் இட்டாள். பெரும் காதலுடன் வாழ்ந்த அவள், அப்போது விரும்பியதெல்லாம், மானத்துடன் இறப்பதையே!! எதிரிகளின் கண்களில் மண் தூவி, கொடும் விஷத்தால், மரணத்தை தழுவியது அவளது வாழ்க்கை.

காதலர்கள் மடிந்திருக்கலாம், அவர்களது மேனி புதையுண்டு, மண்ணோடு மண்ணாகியிருக்கலாம். ஆனால், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும், இன்றளவும் அவர்கள் நினைவு கொள்ளப் படுகிறார்கள் என்றால், அவர்களது காதல் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதால்தான். உலக அழகி என்று ஆராதித்த அவளுக்கு, தன் காதலனுக்கு அருகிலேயே அடக்கம் செய்யப் படுவதுதான் வாழ்வின் பயனாகியுள்ளது. அதுதான் காதலின் அழகோ??

1 comment:

butterfly Surya said...

MY GREAT MASTER OSHO SAYS:

Falling in love you remain a child; rising in love
you mature. By and by love becomes not a relationship, it becomes a state of your being.
Not that you are in love - now you are love.....

Thanx for a xlent post...

Cheers

Surya