Thursday, November 27, 2008

திருப்பதி திருமலை!!


திருப்பதி திருமலையில் இருக்கும் திருவேங்கடமுடையானுக்கு தனியாகப் பெயரில்லை. திருவேங்கடமுடையான் என்பது காரணப் பெயர். திருவேங்கடத்துக்கு சொந்தக்காரர். அதன் உரிமையாளர், அதன் உடையவர். திருவேங்கடமுடையான் என்ற பெயரை, வட மொழியில் சொல்வதானால் வேங்கடேஸ்வரர் என்று சொல்லலாம். அதாவது வேங்கடத்துக்கு உரிமையானவர் அல்லது ஈஸ்வரர். மற்ற கோவில்களில் இப்படி இல்லை. கபாலீஸ்வரரை மயிலாப்பூர்காரர் என்று எவரும் கூறுவதில்லை. மதுரையிலிருக்கும் கடவுளை மதுரைக்காரர் என்று எவரும் சொல்வதில்லை. பின் ஏன் இவரை மட்டும் வேங்கடமலையை மையப்படுத்திய காரணப் பெயரால் சொல்கிறோம்? அவருக்கென்று பெயர் இல்லையா? நம் முன்னோர்களான வேத கால ரிஷிகளும், சித்தர்கள், அகஸ்தியர் போன்றோர்களும், இவர் யார்? சிவனா, விஷ்ணுவா, சக்தியா, முருகக் கடவுளா ? என்று தெரியாமல் வியந்திருக்கிறார்கள். ஒரு உதாரணத்திற்கு, தாளப்பாக்கம் அன்னமையா இவர் பெயரில் 32 ஆயிரம் பாடல்களைப் பாடியுள்ளார். அப்பேர்ப்பட்ட அவருக்கே வேங்கடமுடையான் யார் என்ற சந்தேகம் ஏற்பட்டது. HMV கேஸட் நிறுவனத்தார் பாலாஜி பஞ்சரத்னம் என்ற பெயரில் கேஸட் வெளியிட்டனர். முதன் முதலாக எம்.எஸ்.சுப்பு லக்ஷ்மி அவர்கள் தாளப்பாக்கம் அன்னமையா பாடல்களை அதில் பாடினார்கள். அப்பாடல்களைத் தேர்வு செய்தவர் காஞ்சி பரமாச்சார்ய ஸ்வாமிகள். திருவையாறு தியாகய்யர் பூர்வி கல்யாணி ராகத்தில், நீ யார், சிவனா, விஷ்ணுவா, சக்தியா என்று தெரியவில்லையே என்று வேங்கடமுடையானை தரிஸனம் செய்த பிறகு பாடியிருக்கிறார். ஆகவே, மற்ற தெய்வங்கள் போல் வேங்கடமுடையானுக்கு தனி பெயர் கிடையாது.சுமார் 500 வருஷங்களாக இவருக்கு சீனிவாசன் என்ற பெயரும் உண்டு. குணசேகரம், உப்பிலியப்பன் கோவில், வையாவூர் மற்றும் பல விஷ்ணு கோவில்களிலும் உள்ள கடவுளர்க்கு சீனிவாசன் என்ற பெயர் உண்டு. யாரந்த சீனிவாசன்? க்ருஷ்ண பகவான் தான் வாசுதேவன், இவருடைய பிள்ளை ப்ரத்யும்னன். அனிருத்தன் க்ருஷ்ணனின் பேரன். இந்த வாசுதேவன் தான் சீனிவாசன். வாசுதேவன், ராமன், க்ருஷ்ணன், சீனிவாசன் எல்லாம் விஷ்ணுவின் அவதாரங்கள். மற்ற கோவில்களில் இருப்பது விஷ்ணு சிலைகள். அதனால் அக்கோவில்களில் இருக்கும் சிலைகளை சீனிவாசன் என்று அழைக்கலாம். திருமலை கோவிலில் இருப்பது திருவேங்கடமுடையான் சிலை. இந்த சிலை விஷ்ணு சிலை இல்லை. அதனால் இவரை சீனிவாசன் என்று அழைப்பது சரியில்லை. சீனிவாசன் என்ற் பெயர் ஏழுமலையானுக்கு பொருந்தாது. என்னதான் பெயர் மாற்றம் செய்தாலும், சங்கு சக்கரம் செயற்கையாக இருந்தாலும், திருவேங்கடமுடையான் விக்ரஹத்தில் விஷ்ணு அம்சம் 30 சதம்தான். மீதமுள்ள 70 சதவீதம் சிவாம்சமும், அம்பாள் அம்சமும் ஆகும். உலகிலேயே ஏழுமலையான் சிலையில்தான் யோக போக முத்திரைகள் இருக்கின்றன. இவை அலர்மேல் மங்கையின் அம்சங்கள். அலர்மேல் மங்கையும், ஏழுமலையானும் சேர்ந்து ஒன்றாக திருவேங்கடமுடையான் சிலையில் இருக்கிறார்கள். ஏழுமலையான் தானே அவதரித்த தம்பிரான் - சுயம்பு. தானே விரும்பி, சில ஸாமுத்ரிகா லக்ஷணங்களோடு தோன்றியிருக்கிறார். அதே போல் இவருக்கு ஸ்தல புராணம் கிடையாது. இப்போது இருக்கிற ஸ்தல புராணங்களில் பழமையானது வேங்கடாஜல மஹாத்மியம் ஆகும். இது 1491 ஆம் ஆண்டு மஸிண்டி வேங்கடதுரைவார் என்பவரால் இயற்றப்பட்டது. இதில் வராக, பத்ம, கருட, ப்ரம்மாண்ட, மார்கண்டேய, பவிஷ்யோத்ர, ஸ்கந்த, ஆதித்ய, வாமன, ப்ரம்மம் ஆகிய பத்து புராணங்களிலிருந்து வேங்கடேஸர் பற்றிய செய்திகள் தொகுப்பாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் திருவேங்கடமுடையானைப் பற்றிய விவரங்கள் இல்லை. திருமலையில் உள்ள தீர்த்தங்கள் மற்றும் மலைகள் பற்றிய விவரம் அதிகமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. திருவேங்கடமுடையான் எப்போது திருமலைக்கு வந்தார்? திருவேங்கடமுடையான் திருமலைக்கு வந்து 250 கோடி வருடங்கள் ஆகின்றன. இதன் ஆதாரம்., முதலில் அறிவியல் அடிப்படையில் ஆதாரத்தைப் பார்ப்போம். திருவேங்கடமுடையானின் கோவிலிலிருந்து, ஈஸான்ய திக்கில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், சில பாறைகள் இருக்கின்றன. இந்த பாறைகளுக்கு சிலா தோரணம் என்று சொல்லுவர். உலகத்திலேயே இந்தப் பாறைகள் இங்கு மட்டும்தான் இருக்கின்றன. இந்த பாறைகளின் நடுவே இருக்கும் துவாரத்திலிருந்து திருவேங்கடமுடையான் வெளிப்பட்டார் என்பது ஐதீகம். இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். திருவேங்கடமுடையானின் திருமேனியும், இப்பாறைகளும் ஒரே விதமானவை. மண்ணியல் (ஜியாலஜிஸ்ட்) நிபுணர்கள் இப்பாறையை ஆய்வு செய்து, 250 கோடி ஆண்டுகள் வயது கொண்டவை என கணக்கிட்டிருக்கிறார்கள். இரண்டாவதாக, பச்சை கற்பூரம் திருமேனிக்கு சாற்றுகிறார்கள். காலம் காலமாக, ஹிந்து அரசர்கள் ஆண்ட காலங்களிலிருந்து இந்த பச்சை கற்பூரம் ஒரு தாவர பொருள். சுமத்ரா, கம்போடியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் இப்போது பச்சை கற்பூரன் ஒரு கெமிக்கல்; அரிப்பைக் கொடுக்கும் ஒரு அமிலம். இந்த பச்சை கற்பூர கெமிக்கலை சாதாரண பூமியிலுள்ள கருங்கல்லில் தடவினால், கல் வெடித்து விடும். ஆனால் சிலா தோரணத்திலுள்ள பாறைகளில் இந்த கெமிக்கலைத் தடவினால், அப்பாறைகள் வெடிப்பதில்லை. அதே போல் திருவேங்கடமுடையானுக்கு 365 நாட்களும் பச்சை கற்பூரம் சாற்றினாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை. சிலா தோரண பாறைகளும், திருவேங்கடமுடையானின் பாறைகளும் ஒரே தன்மை கொண்டவை. மூன்றாவதாக, எந்த கருங்கல் சிலையானாலும் எங்கேயாவது ஒரு இடத்தில் சிற்பியின் உளி பட்டிருக்கும். எந்த உலோக சிலையானாலும், தங்கமாகட்டும், ஐம்பொன்னாகட்டும், உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். திருவேங்கடமுடையானின் சிலையில் எங்கும் உளி பட்ட அடையாளம் தெரியவில்லை. நான்காவதாக இவருடைய சிலை திருமேனி பளபளப்பாக இருக்கிறது. கருங்கல் சிலை மொரமொரப்பாக இருக்கும். கருங்கல்லுக்கு பாலிஷ் போடலாம். பாலிஷ் போட்டால் பள பளவென்று இருக்கும். ஆனால் அது மெஷின் பாலிஷ். மெஷின் பாலிஷ் வந்து சுமார் முப்பது வருடங்கள்தான் ஆகின்றன. தவிர மெஷின் பாலிஷ், தூண்கள், கம்பங்கள் போன்ற நேர்கோட்டுப் பொருட்களுக்குத்தான் போட முடியும்ல். நுணுக்கு வேலைப்பாடுகளுக்கு மெஷின் பாலிஷ் போட இயலாது. இவருடைய திருமேனி விக்ரஹத்தில் நெற்றிச்சுட்டி, காதணி, புருவங்கள் எல்லாம் பாலிஷ் போட்டவை போல் பள பளப்பாக இருக்கின்றன. ஐந்தாவதாக, இவருடைய திருமேனி எப்போதும் 110 பாரன் ஹீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை மூவாயிரம் அடி உயரத்திலுள்ள குளிர் பிரதேஸம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால் அபிஷேகம் முடிந்தவுடன் அவருக்கு வியர்க்கிறது. வியாழக் கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகை மற்றும் தங்க கவசங்களை கழற்றும் போது ஆபரணங்கள் எல்லாம் சூடாக கொதிக்கின்றன. இந்த தகவல்களை சுமார் நாற்பது வருஷங்களுக்கு முன்பிருந்த பிரபல சான்றோர்கள், அர்ச்சகர்கள், வேங்கடபதி தீக்ஷிதர், மணப்பாக்கம் சுந்தர ஆச்சாரியர், முல்லன்றம் கனபாடிகள் போன்றோர் சொல்லியிருக்கின்றார்கள். இவர்கள் ஸ்வாமிக்கு பல வருஷங்கள் அபிஷேகம் செய்தவர்கள். கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் சிவலிங்கத்திற்கு அருகில் மிகவும் குளிர்ச்சியான கற்கள் இருக்கின்றன. அவை சந்திரகாந்தக் கற்கள். அதேபோல உஷ்ணமாக திருவேங்கடமுடையான் திருமேனி இருக்கிறது. இந்த ஆதாரங்கள் எல்லாம் நேரடியாக பரிசோதித்துப் பார்க்கும்படி இருக்கின்றன. எந்த கோவிலிலும் இல்லாத சில சிறப்புகள் இந்த கோவிலில் இருக்கின்றன. அவற்றில் ஒன்று மந்திர புஷ்பம். இதற்கு மூர்த்தி மந்திரம் என்று பெயர். விடியற்காலையில் கோவிலில் பிரதான அர்ச்சகர் இந்த மந்திரத்தை சொல்லுவார். இந்த மந்திரத்தை சொன்னால் வேங்கடமுடையான் பிரசன்னமாகி விட்டார், சபை கூடி விட்டது என்று பொருள். .............

6 comments:

Raghav said...

அடேங்கப்பா.. திருமலை பற்றி இதுவரை அறியாத புதிய செய்திகள் ரம்யா.. நன்றி.. மேலும் எழுதுங்கள்..

Raghav said...

//சீனிவாசன் என்ற் பெயர் ஏழுமலையானுக்கு பொருந்தாது. என்னதான் பெயர் மாற்றம் செய்தாலும், சங்கு சக்கரம் செயற்கையாக இருந்தாலும், திருவேங்கடமுடையான் விக்ரஹத்தில் விஷ்ணு அம்சம் 30 சதம்தான். மீதமுள்ள 70 சதவீதம் சிவாம்சமும், அம்பாள் அம்சமும் ஆகும். //

இதை நான் மறுக்கிறேன் ரம்யா.. 1000 வருடங்களுக்கு முன்பே இப்பிரச்சனையை எம்பெருமானார் ராமானுசர் தீர்த்து வைத்தது தங்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்கும்.

அது மட்டுமின்றி வேங்கடேசனிடம் இராமன்+கிருஷ்ணன் இருவரின் அம்சமும் உள்ளது.. வேங்கடேசன் திருமேனியில் இடுப்பில் கயிற்றினால் கட்டப்பட்ட தழும்பும், தோளில் அம்புறாத்துணியின் தளும்பும் உள்ளதாக சொல்வர்.

வேங்கடவன் 100% ஸ்ரீனிவாசனே.. உற்சவ மூர்த்திக்கு உக்ர ஸ்ரீனிவாசன் என்றே பெயர்.. ஸ்ரீனிவாசன் என்பதும் காரணப் பெயரே..

தவறிருந்தால் மன்னிக்கவும்.

"ஸ்ரீரங்கத்து தேவதை " said...

enakku therinthavai potruken, unmaya poiyanu neenga sollungo.......

Gokul said...

ரம்யா,

தற்செயலாக உங்கள் வலைப்பக்கத்திற்கு வந்தேன், இந்த திருப்பதி பற்றிய தகவல்கள் மிகவும் ஸ்வாரஸ்யம், ஆனால் எந்த ஆதாரத்தில் இவ்வளவு விஷயங்களை எழுதினீர்கள்? அந்த பாறைகளும் மூலவர் விக்ரஹமும் ஒரே கல்லிலானவை என்பதை எதனை ஆதாரமாக கொண்டு எழுதினீர்கள் என்பதை தெரிந்துக்கொள்ள ஆவலாய் இருக்கிறேன்!

நன்றி
கோகுல்
(http://kulambiyagam.blogspot.com)

"ஸ்ரீரங்கத்து தேவதை " said...

aatharam ketaal kudukka iyalaatha nilai but anga iruppavargalaal ithai marukka mudiyavillai enbathu unmaye :)

சிராப்பள்ளி பாலா said...

திருமலையில் இருப்பது சிவனின் விக்ரகம் என்றும் அதில் திருமண் அணிவித்து ஏழுமலையானாக மாற்றி விட்டனர் என்பதில் இருந்து பலவிதமான சர்ச்சைக்கள் இன்றுவரை!
ஆனால் அங்கு மட்டும் கோடிக்கணக்கில் செல்வம் சேரும் ரகசியம் தெரியவில்லை.

ஏழுமலையானை பற்றி தெரியாத பல விஷயங்களை எழுதியதற்கு நன்றி! வாழ்த்துக்கள்!